தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுவா சூ காங் குழுத்தொகுதியில் புதிய பள்ளிவாசல், $1 அத்தியாவசியப் பொருள்கள்

2 mins read
0c988751-ef9e-4609-8c4b-ce67019e020e
சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் (இடமிருந்து) தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், திரு ஸுல்கர்னாயின் அப்துல் ரஹிம், மனிதவள அமைச்சர் டான் சீ லெங், திருவாட்டி சூ பெய். - படம்: பெரித்தா ஹரியான்

2025 பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற 100 நாள்களுக்குள் தெங்கா குடியிருப்பாளர்களுக்குப் புதிய பள்ளிவாசல், $1 மதிப்பிலான அத்தியாவசியப் பொருள்கள், சுவா சூ காங் பலதுறை மருந்தகத்தில் முன்னுரிமை போன்ற பல வசதிகளை உருவாக்குவதில் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.

தெக் வாய் லேனின் தொகுதி உலா மேற்கொண்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுவா சூ காங் குழுத்தொகுதிக்கான திட்டங்கள் பற்றி பகிர்ந்துகொண்டனர்.

“பொதுத் தேர்தலுக்கு முன் நாங்கள் 100 நாள் திட்டம் பற்றி பேசினோம். அந்தக் குறிப்பிட்ட மைல்கல்லை எட்டிவிட்டோம். அதுகுறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்வது முக்கியம் என்று நினைக்கிறோம்,” என்றார் குழுத்தொகுதிக்கான அமைச்சரும் மனிதவள அமைச்சுருமான டான் சீ லெங்.

குழுத்தொகுதிக்குப் பொறுப்பேற்றவுடன் தொகுதி உலாக்கள், கலந்துரையாடல்கள் ஆகியவை மூலம் தமது அணி குடியிருப்பாளர்களின் கருத்துகளைக் கேட்டறிந்ததாக டாக்டர் டான் குறிப்பிட்டார்.

டாக்டர் டானின் அணியில் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், இரண்டாம் தவணைக் கால நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான திரு ஸுல்கர்னாயின் அப்துல் ரஹிம், முதல் தவணைக் கால நாடாளுமன்ற உறுப்பினரும் நரம்பியல் நிபுணருமான திருவாட்டி சூ பெய் லிங் ஆகியோர் உள்ளனர்.

இவ்வாண்டு மே 3ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொடர்ந்து நான்காவது தவணைக் காலத்துக்கு மக்கள் செயல் கட்சியின் அணி சுவா சூ காங் குழுத்தொகுதியைத் தக்கவைத்தது.

கியட் ஹொங் தொகுதியைக் கவனித்துக்கொள்ளும் திரு ஸுல்கர்னாயின், ஃபோரஸ்ட் டிரைவில் கட்டப்படும் புதிய பள்ளிவாசல் குழுத்தொகுதியில் கட்டப்படும் ஐந்தாவது பள்ளிவாசல் என்று குறிப்பிட்டார்.

குழுத்தொகுதியில் தற்போதுள்ள பள்ளிவாசல்களில் இடப்பற்றாக்குறை நிலவுவதாகச் சொன்ன அவர், தெங்கா பேட்டை வளர்வதால் முஸ்லிம்களுக்குத் தொழுகை செய்ய கூடுதல் இடவசதி உருவாக்குவது அவசியம் என்றார்.

பல குடியிருப்பாளர்களும் அன்றாட வாழ்க்கைச் செலவுகள் குறித்து கவலை தெரிவித்ததாக திரு ஸுல்கர்னாயின் கூறினார். இவ்வாண்டு முடிவுக்குள் 12,000 குடும்பங்கள் அத்தியாவசிய பொருள்களை $1க்கு வாங்கும் திட்டத்தைக் குழுத்தொகுதி கட்டங்கட்டமாக அறிமுகப்படுத்தும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்