டெளன்டவுன் பெருவிரைவு ரயில் பாதையின் விரிவாக்கப் பணிகளின் ஓர் அங்கமாக இயூ டீ வில்லேஜுக்கு அருகே நிலத்தடியில் புதிய பெருவிரைவு ரயில் நிலையம் ஒன்று கட்டப்படவுள்ளது.
நீட்டிக்கப்படவுள்ள டெளன்டவுன் பாதை புக்கிட் பாஞ்சாங் நிலையத்திலிருந்து சுங்கை காடுட் வரை செல்லும். அப்பாதை கட்டி முடிக்கப்பட்ட பிறகு சைனாடவுன் போன்ற மத்திய பகுதிகளுக்குச் செல்வதற்கான பயண நேரம் 20 நிமிடங்கள் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு கிலோமீட்டர் நீளத்தில் அமையவிருக்கும் டெளன்டவுன் பாதையின் புதிய அங்கத்தில் சுங்கை காடுட் சென்ட்ரல் நிலையமும் இடம்பெறும். அந்நிலையம், டெளன்டவுன் பாதை, வடக்கு-கிழக்கு பாதை இரண்டுக்கும் இடையிலான முனையமாக விளங்கும்.
நீட்டிக்கப்படும் டெளன்டவுன் பாதை 2035ஆம் ஆண்டு திறக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமையன்று (ஜனவரி 6) அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. அவற்றில் இடம்பெறும் நிலையங்களுக்கான கட்டுமானப் பணி இவ்வாண்டு நான்காம் காலாண்டுக்குள் தொடங்கும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.
தற்போது புக்கிட் பாஞ்சாங் நிலையம், டெளன்டவுன் பாதையின் கடைசி நிலையமாக விளங்குகிறது. நீட்டிக்கப்படவுள்ள டெளன்டவுன் பாதையில் அதற்கு அடுத்ததாக வரவிருக்கும் நிலையம் சுங்கை காடுட் அவென்யூவில் அமையும்.
அந்நிலையம், அரசாங்க அமைப்பான ஜேடிசி கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான தொழில்துறை நிலத்தில் கட்டப்படும்.
DE1 என்று தற்போதைக்கு சுருக்கமாகப் பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய நிலையம், ரயில் பசுமைப்பாதை (Rail Corridor) பகுதிக்கு அருகே அமைந்திருக்கும். அது, இயூ டீ வில்லேஜ், பாங் சுவா மீன்பிடித் தளம் (Pang Sua Fishing Deck), பாங் சுவா பூங்கா இணைப்பு ஆகியவற்றுடன் பாதசாரிகளுக்கான மேம்பாலத்தின்வழி இணைக்கப்படும்.
புதிய ரயில் நிலையத்தையும் சுவா சூ காங் நார்த் 7, உட்லண்ட்ஸ் ரோடு ஆகிய சாலைகளையும் வாகனப் போக்குவரத்துக்கான மேம்பாலம் ஒன்று இணைக்கும். கூரையிடப்பட்ட நடைபாதைகள், சைக்கிளோட்டப் பாதைகள் ஆகியவையும் கட்டித் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதோடு, சுங்கை காடுட்டில் அமையவிருக்கும் புதிய ரயில் முனையம்தான் டெளன்டவுன் பாதையின் புதிய கடைசி நிலையமாக இருக்கும்.