சிங்கப்பூரின் கடந்த காலம் பற்றி பயிலரங்குகள், பள்ளி நிகழ்ச்சிகள், தொல்லியல் தொடர்பான கண்காட்சிகள் மூலம் பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்த தேசிய மரபுடைமைக் கழகத்தின் புதிய துணை நிறுவனம் வகைசெய்கிறது.
கடந்த 2024 ஆகஸ்ட் முதல் தேதி தொடங்கப்பட்ட மரபுடைமைஎஸ்ஜி (HeritageSG), அதிக தனியார் - பொதுத்துறை பங்காளித்துவம் மூலமும், அரும்பொருளகச் சேவைகள் மற்றும் நிகழ்ச்சி மேலாண்மை போன்ற துறைகளில் திறனாளர்கள் இருப்பதை உறுதி செய்வதன் மூலமும் சிங்கப்பூரின் மரபுடைமைத் துறையை மேலும் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது.
சிங்கப்பூரின் மரபுடைமையுடன் பொதுமக்கள் ஈடுபடுவதற்கான திட்டங்களிலும் இது கவனம் செலுத்தும். ஆண்டு விழாக்களுடன் சிறுவர் அரும்பொருளகம் உள்ளிட்ட சிறிய அரும்பொருளகங்களையும் காட்சியகங்களையும் நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை இது மேற்கொள்ளும்.
பொதுவாக லாப நோக்கற்ற அமைப்புகளால் பயன்படுத்தப்படும், உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக (company limited by guarantee CLG)) இது உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு பங்கு மூலதனம் இல்லை, மேலும் ஆணைபெற்ற நிறுவனங்களைப் போலல்லாது, பெருநிறுவனங்களிடம் இருந்து நிதி பெறலாம்.
‘மரபுடைமைஎஸ்ஜி’யின் தலைமை நிர்வாகியான 44 வயது எஸ். ஜொனதன் சாங், கல்வியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். ஃபின்டோபியா இந்தோனீசியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர்.
‘மரபுடைமைஎஸ்ஜி’ கலைப்பொருள்களைச் சுத்தம் செய்யவும் அகழ்வாராய்ச்சிகளில் பங்கேற்கவும் தொண்டூழியர் குழுவைக் கொண்டிருப்பதாக ஜனவரி 21 அன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த நேர்காணலில் முனைவர் சாங் கூறினார்.
“இது குறித்த அதிகமான அறிதல், பள்ளிகளுடன் அதிக பயிலரங்குகள், ஒத்துழைப்புகளை மேற்கொள்ள விரும்புகிறோம். சிறிய நாடான சிங்கப்பூரில் தொல்பொருள் அகழ்வாய்வுகள் குறித்து அறிந்துகொள்ள அதிகம் உள்ளது என்பதைக் கொண்டாட விரும்புகிறோம்,” என்ற அவர், திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் 1984 முதல், பாடாங், ஃபோர்ட் கேனிங், எம்ப்பிரஸ் பிளேஸ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தொல்பொருள் அகழ்வாய்வுகள் நடந்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
2021ல், பெட்ரா பிராங்காவுக்கு அப்பால் உள்ள நீர் பகுதியில் இரு கப்பல் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் கண்டெடுக்கப்பட்ட பீரங்கி, நங்கூரங்கள், 9 டன் சிறிய கலைப் பொருள்களில் சில ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கப்பல் சிதைவுகளை ‘மரபுடைமைஎஸ்ஜி’ ஆய்வுசெய்து பதப்படுத்தி வருவதாக முனைவர் சாங் கூறினார்.
சிங்கப்பூரில் தொல்பொருள் ஆய்வை ‘மரபுடைமைஎஸ்ஜி’ விரிவாக்குகிறது என்றார் தேசிய மரபுடைமைக் கழகத்தின் தொல்பொருள் ஆலோசனைக் குழுத் தலைவரான திரு குவா சோங் குவான்.
கடந்த 1984 முதல் தொல்பொருள் ஆய்வாளர் ஜான் மிக்சிக் மற்றும் பலரால் அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட டன் கணக்கான கலைப்பொருள்களின் ஒரு பகுதியை ‘மரபுடைமைஎஸ்ஜி’ பொறுப்பெடுக்கும் என்றார் அவர்.
உள்ளூர் பல்கலைக்கழகங்களும், தென்கிழக்காசிய கல்விக் கழகம் - யூசோஃப் இஷாக் கல்விக்கழகத்தின் தொல்பொருள் பிரிவும் கலைப்பொருட்களை சேமித்து ஆய்வுகளுக்குக் கிடைக்கச் செய்வதில் முனைப்புக்காட்டுவதில்லை என்று குறிப்பிட்ட திரு குவா, ‘மரபுடைமைஎஸ்ஜி’ இப்போக்கை மாற்றும் ஆற்றல் கொண்டது என்றார்.
கல்வியாளர்களுக்கும் தொழில்முறை தொல்பொருள் ஆய்வாளர்களுக்கும் மட்டுமே கிடைக்கக்கூடியதாக இருந்த முன்னைய சேகரிப்புகளை இந்த அமைப்பு பெற்று பொதுமக்கள் பார்வைக்கு விடுவதன் மூலம், பொதுமக்கள் தொல்பொருள் பற்றி அறிந்துகொள்ளவும் அதில் ஈடுபாடு காட்டவும் வாய்ப்புள்ளதாக திரு குவா குறிப்பிட்டார்.
தொல்பொருள்களை மேற்பார்வையிடுவது, காட்சியகங்களை நிர்வகிப்பதுடன், மரபுடைமைக் கழகத்தின் பொதுமக்களுடனான ஈடுபாட்டையும் 2024 ஆகஸ்ட் முதல் ‘மரபுடைமைஎஸ்ஜி’ பொறுப்பெடுத்துள்ளது. சிங்கப்பூர் மரபுடைமை விழா, இரவு விழாக்களை நடத்துவது, சிங்கப்பூரின் கலை, மரபுடைமை வட்டாரமான பிராஸ்பசா/புகிசில் புத்துணர்ச்சியூட்டுவது முதலியவற்றை இது மேற்கொள்கிறது.
அரும்பொருளகங்களில் மெய்நிகர், மிகைமெய் காட்சிகளை அமைக்கும் மின்னிலக்க சேவையையும் இது வழங்குகிறது.
பதிவுசெய்யப்பட்ட அறநிறுவனமான ‘மரபுடைமைஎஸ்ஜி’, மரபுடைமைக் கழகத்தின் நிதிதிரட்டும் பிரிவாகவும் உள்ளது.