ஆர்ச்சர்ட் ரோட்டில் மூன்று பகுதிகளை இணைக்கும் புதிய பூங்கா

ஆர்ச்சர்ட் ரோட்டில் மூன்று பகுதிகளை இணைக்கும் புதிய பூங்கா

2 mins read
d5194ac6-ddf6-430e-8bbb-34333c47eb65
சிங்கப்பூர்ப் பெண்களைக் கெளரவிக்கும் வகையில் அமைக்கப்படும் தோட்டத்தின் மாதிரிப் படம். - படம்: தேசியப் பூங்காக் கழகம்
Google News Preferred Icon

ஆர்ச்சர்ட் ரோட்டின் டோபி காட் பகுதியில் ஒரு புதிய பூங்கா அமைக்கப்படவுள்ளது.

தற்போதுள்ள இஸ்தானா பூங்கா, டோபி காட் கிரீன், பினாங்கு ரோடு திறந்தவெளி ஆகிய பகுதிகள் இதனுடன் இணைக்கப்படும். மேலும், ஆர்ச்சர்ட் ரோட்டின் 500 மீட்டர் நீளப் பகுதி நடையர்கள் மட்டுமே செல்லும் வழியாக மாற்றப்படும்.

தற்போது 1.3 ஹெக்டர் பரப்பளவில் உள்ள இஸ்தானா பூங்காவைவிட இந்தப் புதிய ஒருங்கிணைந்த பூங்கா மூன்று மடங்கு பெரியதாக இருக்கும். தேசிய வளர்ச்சித் துணை அமைச்சர் ஆல்வின் டான் புதன்கிழமை (ஆகஸ்ட் 12) இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மறுபொலிவு பெற்ற பகுதியில் ஆர்க்கிட் பூங்கா மற்றும் பிளாசா, இஸ்தானா பூங்கா, டோபி காட் கிரீன் ஆகிய மூன்று பிரிவுகள் இடம்பெறும்.

பல்வேறு ஆர்க்கிட் வகைகள் வெவ்வேறு வளரும் சூழல்களுக்கு ஏற்ப எவ்வாறு தகவமைத்துக்கொள்கின்றன என்பதை விளக்கும் வகையில் ஆர்க்கிட் பூங்கா அமையும்.

மறுசீராக்கம் செய்யப்படும் இஸ்தானா பூங்காவில், இஸ்தானாவின் முதன்மை வாயிலுக்குச் செல்லும் வகையில் கொடிக் கம்பங்களும் முதிர்ந்த மரங்களும் கொண்ட புதிய சிறப்புப் பாதை அமைக்கப்படும்.

இஸ்தானாவின் முதன்மை வாயிலுக்குச் செல்லும் சிறப்புப் பாதையின் மாதிரிப் படம்.
இஸ்தானாவின் முதன்மை வாயிலுக்குச் செல்லும் சிறப்புப் பாதையின் மாதிரிப் படம். - படம்: தேசியப் பூங்காக் கழகம்

அங்குச் சிங்கப்பூரின் பன்முகப் பண்பாட்டுப் பாரம்பரியத்தைக் காட்டும் காட்சியகங்களும் தாவரவியல் அனுபவத்தை மேம்படுத்தும் உட்புற ஈர்ப்புகளும் இடம்பெறக்கூடும்.

டோபி காட் கிரீன் பகுதியில், சிங்கப்பூர்ப் பெண்களின் முன்னோடி உணர்வையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சிறப்புத் தோட்டம் அமைக்கப்படும். இது பெண்களுக்கான பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகள், கல்விச் செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்கும்.

“இந்தத் தோட்டம், சமுதாயத்தின் அனைத்து நிலைகளையும் சேர்ந்த பெண்கள் சமூக நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்க ஊக்குவிக்கும் என நம்புகிறோம்,” என்று நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு டான் கூறினார்.

ஆகஸ்ட் 12ஆம் தேதி தெமாசெக் ஷாப்ஹவுசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்தானா பூங்கா, டோபி காட் பகுதிக்குப் புத்துயிரூட்டும் திட்டங்களின் நிலவரத்தைக் காட்டும் கண்காட்சிப் பலகைகளைத் தேசிய வளர்ச்சித் துணை அமைச்சர் ஆல்வின் டானுக்கு விளக்கினார் தேசியப் பூங்காக் கழகத்தின் மூத்த மேலாளர் அலிசியா சோ.
ஆகஸ்ட் 12ஆம் தேதி தெமாசெக் ஷாப்ஹவுசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்தானா பூங்கா, டோபி காட் பகுதிக்குப் புத்துயிரூட்டும் திட்டங்களின் நிலவரத்தைக் காட்டும் கண்காட்சிப் பலகைகளைத் தேசிய வளர்ச்சித் துணை அமைச்சர் ஆல்வின் டானுக்கு விளக்கினார் தேசியப் பூங்காக் கழகத்தின் மூத்த மேலாளர் அலிசியா சோ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த 2022ஆம் ஆண்டில் சிங்கப்பூர்ப் பெண்களின் மேம்பாடு குறித்த வெள்ளை அறிக்கையில் இந்தத் தோட்டத்தை அமைப்பதற்கான திட்டம் முதன்முதலில் முன்மொழியப்பட்டதாக தேசியப் பூங்காக் கழகம் குறிப்பிட்டது.

தெமாசெக் ஷாப்ஹவுசில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்டட உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களிடம் இந்தத் திட்டம் குறித்த கருத்துகள் கேட்கப்பட்டன.

பொதுமக்கள் இந்தத் திட்டங்களை ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை அங்குள்ள கண்காட்சியில் பார்வையிடலாம்.

ஃபோர்ட் கேனிங் பூங்காவிற்கான இணைப்புப் பாலத்தின் மாதிரிப் படம்.
ஃபோர்ட் கேனிங் பூங்காவிற்கான இணைப்புப் பாலத்தின் மாதிரிப் படம். - படம்: தேசியப் பூங்காக் கழகம்

ஆர்ச்சர்ட் ரோட்டைப் பசுமைப் பகுதியாக மாற்றும் மறுபொலிவுத் திட்டம் 2019ஆம் ஆண்டில் சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம், நகர மறுசீரமைப்பு ஆணையம், தேசியப் பூங்காக் கழகம் ஆகியவற்றால் அறிவிக்கப்பட்டது.

ஆர்ச்சர்ட் ரோட்டை நகரப் பகுதியின் பசுமைச் சோலையாக மாற்றுவதும் காலனித்துவக் காலத்தில் தோட்டங்களாக இருந்த அந்தப் பகுதிக்கு மீண்டும் பொலிவைக் கொண்டு வருவதும் இந்தத் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.

சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகத்தின் உதவித் தலைமை நிர்வாகி ஜீன் எங், இது 15 ஆண்டுகாலத் திட்டம் என்றும் 2030களின் மத்தியில் இஸ்தானா பூங்கா மறுமேம்பாடு முழுமையடையும் என்றும் தெரிவித்திருந்தார்.

திட்டத்தைச் சீரமைத்து, பங்குதாரர்களுடன் மேலும் கலந்தாலோசித்து, நிதியுதவி ஒப்புதல் பெற்ற பிறகே மேம்பாட்டுக் காலஅட்டவணை உறுதிசெய்யப்படும் என்று தேசியப் பூங்காக் கழகத்தின் குழும இயக்குநர் எங் பூன் கீ தெரிவித்தார்.

ஹேண்டி ரோட்டில் அமையவுள்ள பூங்காவின் மாதிரிப் படம்.
ஹேண்டி ரோட்டில் அமையவுள்ள பூங்காவின் மாதிரிப் படம். - படம்: தேசியப் பூங்காக் கழகம்
குறிப்புச் சொற்கள்