வெளிநாடுகளிலிருந்து வேலை பார்க்க சிங்கப்பூருக்கு வரும் நிபுணத்துவ ஊழியர்களை இங்கு சமூகத்தினுள்ளும் வேலையிடங்களிலும் ஒன்றிணைக்கும் முயற்சியாகப் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வேலை அனுமதி அட்டை வைத்திருப்போருக்கான ஒரியென்டேஷன் புரோகிராம் எனப்படும் அறிமுக நடவடிக்கைத் திட்டமும் அவற்றில் அடங்கும்.
வெளிநாட்டுத் தொழிலர் ஒருங்கிணைப்புக்கான செயற்கூட்டணி (ஏஎஃப்ஏ-ஐஎஃப்பி) வெள்ளிக்கிழமை (ஜூலை 10) அதன் அறிக்கையை வெளியிட்டது. சிங்கப்பூரில் வாழ்வது, இங்கு வேலை பார்ப்பதன் தொடர்பிலான நடைமுறைகள் ஆகியவற்றை வெளிநாடுகளிலிருந்து வரும் நிபுணத்துவ ஊழியர்கள் புரிந்துகொள்ள உதவும் திட்டங்களை அந்த அறிக்கை விவரிக்கிறது.
ஒன்றிணைப்பு
உள்ளூரைச் சேர்ந்த ஊழியர்கள், வெளிநாட்டு ஊழியர்கள் ஆகிய இரு தரப்பினரையும் ஒன்றிணைக்க ஆக்கபூர்வமான முறையில் வேலையிடங்களில் நடவடிக்கைகளைச் செயல்படுத்த ஆதரவளிப்பதும் இத்திட்டங்களின் இலக்காகும்.
திட்டங்களில் ஒன்று ‘இபி ஜர்னி’ என்றழைக்கப்படும் அறிமுக நடவடிக்கைத் திட்டமாகும். வேலை அனுமதி அட்டையை வைத்திருப்போருக்கு சிங்கப்பூரின் நடைமுறைகள், கொள்கைகள் போன்றவற்றுக்கான அடிப்படைப் புரிதலை ஏற்படுத்துவது திட்டத்தின் நோக்கமாகும்.
முதற்கட்டம்
முதற்கட்டமாக ‘இபி ஜர்னி’ திட்டம் கடந்த மே மாதம் முதல் ஆறு மாதங்களுக்கு நடைபெற்றுவருகிறது. வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் குறிப்பிட்ட சிலர் இதில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முதலில் திட்டம், வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் 600 பேரைச் சென்றடையச் செய்வது கலாசார, சமூக, இளையர் அமைச்சின் நோக்கமாகும். பிறகு வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் திட்டத்தைப் படிப்படியாக நீட்டிப்பது அமைச்சின் இலக்காகும்.
சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம், சிங்கப்பூர்த் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகியவற்றுடன் இணைந்து கலாசார, சமூக, இளையர் அமைச்சு கூட்டு தகவல் அறிக்கை மூலம் ஊடகங்களுக்குத் தெரிவித்தது.
வெளிநாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் சிங்கப்பூரில் வேலை பார்க்க வேலை அனுமதி அட்டை வகைசெய்கிறது. அதற்குத் தகுதிபெற அவர்கள் மாதத்துக்குக் குறைந்தது 5,600 வெள்ளி சம்பாதிக்கவேண்டும்.

