மாணவர்களுக்குப் பரந்த பணி அறிமுகம் வழங்க புதிய மின்னிலக்கத் தளம்

மாணவர்களுக்குப் பரந்த பணி அறிமுகம் வழங்க புதிய மின்னிலக்கத் தளம்

2027க்குள் 2,000 தொழில்துறைப் பங்காளிகளைச் சென்றடைய கல்வி அமைச்சு இலக்கு
1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2026 - 8:43 pm

2 mins read

தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, உயர்கல்விக் கழகங்களைச் சேர்ந்த ஆசிரியர்களைத் துறை சார்ந்த தனிநபர்களுடனும் நிறுவனங்களுடன் இணைக்கும் ‘இசிஜி மேட்ச்’ (ECG Match) என்ற புதிய மின்னிலக்கத் தளம் புதன்கிழமை (நவம்பர் 11) அறிமுகம் கண்டது.

பள்ளி-தொழில்துறைப் பங்காளித்துவப் பாராட்டு நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ இதனை அறிவித்தார்.

ஒவ்வொரு மாணவரும் பணி வாழ்க்கையைப் பற்றிய புரிதலையும் அனுபவத்தையும் பெறுவதை இத்தளம் உறுதிசெய்யும்.

மேலும், இத்தளத்தின்வழி பள்ளிகள் விரிவான பங்காளித்துவக் கட்டமைப்பை நேரடியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் கூறினார் திரு லீ.

2025ஆம் ஆண்டில் கல்வி அமைச்சின் பங்காளித்துவ ஈடுபாட்டு அலுவலகம் 200 பங்காளிகளுடன் தொடங்கப்பட்டது. தற்போது பங்காளிகளின் எண்ணிக்கை 700ஆக உயர்ந்துள்ளது.

“அடுத்த ஆண்டுக்குள் இத்தளத்தில் இணையும் பங்காளிகளின் எண்ணிக்கையை 2,000ஆக உயர்த்த இலக்கு கொண்டுள்ளோம்,” என்றார் திரு லீ.

கூடுதல் பங்காளிகள் இணையும்போது மாணவர்களின் கற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான நிபுணத்துவத்தையும் ஆதரவையும் ஆசிரியர்களால் மிகச் சிறந்த முறையில் பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏறத்தாழ 200 அமைப்புகளுடன் இணைந்து, 60க்கும் மேற்பட்ட பள்ளி-தொழில்துறைப் பங்காளித்துவங்களைப் பங்காளித்துவ ஈடுபாட்டு அலுவலகம் ஏற்படுத்தியுள்ளது.

அதன் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் புதிய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக திரு லீ கூறினார்.

“இந்தத் தளம் தொழில்முறை நிபுணர்களை அணுகும் வாய்ப்பை அனைவருக்கும் சமமாகக் கிடைக்கச் செய்கிறது. குறிப்பாகத் தங்களுக்கு என்று முன்னாள் மாணவர்கள் ஆதரவு இல்லாத பள்ளிகளுக்கு இது பெரிதும் உதவுகிறது என்றும் கல்வி அமைச்சின் கல்வித் தலைமை இயக்குநர் லியூ வெய் லி, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வேலை உலகம் குறித்த அறிமுகத்தை வழங்குவதற்கு இது மிக முன்கூட்டியே எடுக்கப்படும் முயற்சி அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

“மாணவர்கள் கற்கும் பாடங்கள் எதிர்காலத் தேவைகளுக்கு எவ்வாறு பயன்படுகின்றன என்பதை அவர்களுக்கு உணர்த்துவதற்கு, இது சரியான தருணம். கற்றலின் இறுதி இலக்கை அவர்களுக்குக் காட்டுவதன் மூலம், நாம் மாணவர்களை ஊக்கப்படுத்துகிறோம். இல்லையெனில், அவர்கள் அடுத்த கட்டப் பள்ளியில் சேர்வதை மட்டுமே தங்கள் இலக்காகக் கொண்டு கவனம் செலுத்துவார்கள்,” என்று திருவாட்டி லியூ கூறினார்.

பங்காளித்துவ நிறுவனங்களில் ஒன்று ‘எடித் பேட்டிசரி’. அதன்கீழ் ‘ஜாய்ஃபுல் பேக்கர்ஸ்’ திட்டத்தின்வழி மாணவர்களின் திறன்களை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறார் ஜூயிங் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் செந்தில் செல்வராஜூ.

தாங்கள் மற்றவர்களால் மதிக்கப்படுவதையும் தங்களாலும் பிறருக்கு உதவ முடியும் என்பதையும் உணர வேண்டும் என்ற கொள்கையைத் திரு செந்தில் ஆழமாக நம்புகிறார்.

வழக்கமான வகுப்பறைச் சூழலில் ஒரே முறையில் சொல்லித்தர முடியாத வாழ்க்கை நெறிகளை ‘எடித் பேட்டிசரி’ நிறுவனத்துடன் இணைந்து ‘பேக்கிங்’ செய்முறைப் பயிலரங்குகள் வழியாக மாணவர்களுக்குப் புகட்டுகிறார் திரு செந்தில்.

“மாணவர்கள் தாங்கள் மதிப்புமிக்கவர்கள் என்பதை உணர்வதோடு, தங்களாலும் மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும் என்று நம்பும்போதுதான் அவர்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கை முழுமையாக மேம்படுகிறது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்