தெங்கா வட்டாரத்தில் புதிய பலதுறை மருந்தகம் திறப்பு

தெங்கா வட்டாரத்தில் புதிய பலதுறை மருந்தகம் திறப்பு

2 mins read
மருந்தகத்தில் தாதியர்கள், குடும்பநல மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள், நோயாளி சேவை ஆலோசகர்கள் போன்ற 100 பணியாளர்கள் சேவையாற்றுவர்
895336c0-62a3-4e05-ac15-f595403d761b
தெங்கா வீடமைப்புப் பேட்டையின் ‘பார்க்பாயின்ட்’ எனும் பூங்கா மையத்தில் புதிய பலதுறை மருந்தகம் அமைந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசியப் பல்கலைக்கழகப் பலதுறை மருந்தகங்களின் வரிசையில் புதிய தெங்கா பலதுறை மருந்தகம் சனிக்கிழமை (பிப்ரவரி 28) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.

அந்தப் புதிய வீடமைப்புப் பேட்டையில் வாழும் ஏறத்தாழ 12,000 குடியிருப்பாளர்களுக்கு அது சேவையாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசியப் பல்கலைக்கழக பலதுறை மருந்தகங்களின் செயல்திறனையும் நோயாளிகளின் பராமரிப்பையும் பல நிலைகளில் மேம்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள முதல் மருந்தகமாகவும் அது அமைகிறது.

முதல்முறையாகத் தாய்மை அடைந்துள்ளோருக்குத் தாய்ப்பால் சுரப்பு சார்ந்த சிகிச்சைகள், ஆலோசனைகள் வழங்கும் சேவை அங்கு வழங்கப்படுகிறது. அதோடு 40 வயதைக் கடந்தோருக்குச் சுகாதாரம், உடல்நலம் ஆகிய இரண்டையும் ஊக்குவிக்கும் சமூக ஆதரவு நடவடிக்கைகள் உள்ளடங்கிய ‘என்யுஎச்எஸ்கனெக்ட்’ (NUHSConnect) என்ற ஒருங்கிணைப்புத் திட்டம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தெங்கா பார்க் அவென்யூவுக்கும் தெங்கா டிரைவுக்கும் இடையே 6,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் தேசியப் பல்கலைக்கழகப் பலதுறை மருந்தகங்கள் (NUP) என்ற குழுமத்தால் அது நிறுவப்படும். அக்குழுமத்தின்கீழ் தாய்ப்பால் சேவை அறிமுகப்படுத்தப்படும் முதல் பலதுறை மருந்தகமாகவும் அது அமையும்.

தெங்கா வட்டாரத்தில் திட்டமிடப்பட்டுள்ள 30,000 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் இதுவரையில் 14,000 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 12,000 வீடுகளின் உரிமையாளர்களிடம் சாவிகள் ஒப்படைக்கப்பட்டன.

அதிகாரபூர்வத் திறப்புவிழாவில் கலந்துகொண்டு பேசிய சுகாதார மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், பலதுறை மருந்தகங்கள் அடிப்படையான மருத்துவத்தையும் நோய்களைத் தடுப்பதற்கான முதன்மை நிலைப் பராமரிப்பையும் வழங்குவதில் முக்கியப் பங்காற்றுவதாகத் தெரிவித்தார். மக்கள் ஆரோக்கிய வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க அவை ஆதரவு நல்குவதோடு நோயாளிகளுடன் நீண்டநாள் உறவையும் வளர்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் மேற்கு வட்டாரவாசிகளின் மருத்துவத் தேவைகளுக்குப் புதிய தெங்கா பலதுறை மருந்தகம் பெரிதும் உதவும் என்று மூத்த துணை அமைச்சர் கோ நம்பிக்கை தெரிவித்தார்.

சுவா சூகாங் குழுத்தொகுதியின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விழாவில் கலந்துகொண்டனர். தற்காலிக போக்குவரத்து அமைச்சரும் நிதித் துறைக்கான மூத்த துணை அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ், டாக்டர் சூ பெய் லிங் இருவரும் நிகழ்வில் உடன் இருந்தனர்.

குறிப்புச் சொற்கள்