அனைத்துலக நாடுகளில் உள்ள திரளான கத்தோலிக்கர்களை வரும் ஆண்டுகளில் வழிநடத்துவதற்குப் புதிய போப் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், சிங்கப்பூரர்கள் மனத்தை உவகையும் சோகமும் கலந்த உணர்வு குடிகொண்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் மூன்று நாள் அதிகாரத்துவப் பயணமாகச் சிங்கப்பூர் வந்துசென்ற போப் பிரான்சிஸ் மறைந்துவிட்டதை மறக்க முடியவில்லை என்று சிங்கப்பூர் கத்தோலிக்கர்கள் தமிழ் முரசிடம் தெரிவித்தனர்.
எனினும், புதிய போப்புக்கு வாழ்த்துக் கூறுவது தங்களது கடமை என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
“கத்தோலிக்கர்களாகிய நாங்கள் எங்கள் புதிய போப்பிற்காகக் கடவுளுக்கு மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளோம்,’’ என்றார் ‘தி சோவர்ஸ் நொவீனா’ சங்கத்தின் தலைவர் ஜோஃசப் வின்சென்ட், 65.
உலகில் நிலவும் இந்தச் சவாலான காலகட்டத்தில் தொடர்ந்து இறைத்தொண்டாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் மேய்ப்பர் திருத்தந்தை லியோ என்றும் அவர் சொன்னார்.
இதற்கிடையே, புதிய போப் வருகை நல்வரவு என்றாலும் மறைந்த திருத்தந்தை பிரான்சிசைப் பற்றிய நினைவு மனத்தைவிட்டு அகல மறுப்பதாகக் கூறினார் திரு தேவராஜ் சந்திரசேகர், 55.
‘‘வயதான காலத்திலும் மிகவும் முயற்சி எடுத்து சிங்கப்பூர்வரை வந்து மக்களைப் பார்த்துச் சென்ற திரு பிரான்சிஸ் ஆற்றிய நற்பணிகள் எண்ணிலடங்கா. அவரை உள்ளூரில் பார்க்கக் கிடைத்த வாய்ப்பு பெரும்பேறு,’’ என்றார் திரு சந்திரசேகர்.
‘‘ஏற்றத்தாழ்வுகள் இல்லா உலகிற்கு அழைப்பு விடுத்த அவர் மறைந்தாலும், புதிய போப் மேலும் சிறப்பாகப் பணியாற்றி நன்னெறி மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்ப அயராது சேவை செய்வார்,’’ என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இம்முறை மிகுந்த இழுபறி ஏதுமின்றி புதிய போப் தேர்வாகியுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் திருவாட்டி மரியா கிறிஸ்டினா, 62.
‘‘திருத்தந்தை தலைமையின்கீழ் பிரார்த்தனையைத் தொடருவோம். அவரும் நற்செயல்களைத் தொடர்வார்; உலகம் முழுவதும் அமைதியையும் ஒற்றுமையையும் மேம்படுத்துவதற்கான திசையில் வழிநடத்துவார்,” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் திருவாட்டி கிறிஸ்டினா.
அவருடைய இறைப்பயணம் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
இதற்கிடையே, புதிய போப்பாண்டவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திருத்தந்தை 14ஆம் லியோவுக்கு சிங்கப்பூர் ரோமன் கத்தோலிக்கப் பேராயம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
புதிய போப்பைத் தேர்வுசெய்ய நடைபெற்ற வாக்களிப்பின் முடிவுகளை உவகையுடன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள பேராயம், திருத்தந்தை லியோவின் இறைப்பணி சிறக்க கத்தோலிக்கர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
சிங்கப்பூர் தலைவர்கள் வாழ்த்து
திருத்தந்தை லியோ புதிய போப்பாண்டவராகத் தேர்வு செய்யப்பட்டதற்கு சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம், பிரதமர் லாரன்ஸ் வோங் இருவரும் தங்களின் மனமார்ந்த வாழ்த்துகளைக் கூறியுள்ளனர்.
அதிபர் தர்மன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஆரம்ப நாள்களிலிருந்து கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக சேவைகளை வழங்குவதில் கத்தோலிக்கத் திருச்சபை கொண்டிருந்த பங்கைக் குறிப்பிட்டு, சிங்கப்பூரின் வளர்ச்சிக்குக் கத்தோலிக்கத் திருச்சபை நல்கியுள்ள பங்களிப்புகளை நாடு மதிக்கிறது,’’ என்று கூறியுள்ளார்.
பிரதமர் லாரன்ஸ் வோங் அனுப்பியுள்ள வாழ்த்து மடலில், அமைதியைப் பேணுவதிலும் சமயங்களுக்கு இடையேயான புரிதலை மேம்படுத்துவதிலும் திருச்சபைக்கும் சிங்கப்பூருக்கும் இடையே நிலவும் நீண்டகால நல்லுறவை மேற்கோள் காட்டி புதிய போப்பின் பணி வெற்றியடைய வாழ்த்துக் கூறினார்.