இயன் மருத்துவர்களுக்கான புதிய முதுநிலைப் பயிற்சிக் கட்டமைப்பு

2 mins read
4ea946b7-b4df-455b-b20f-650f3ca68c85
ரீஹபிலிட்டி எனும் கட்டமைப்பு வியாழக்கிழமை (அக்டோபர் 23) தொடங்கப்பட்டது. - படம்: சாவ்பாவ்

திறன்களை மேம்படுத்திக்கொள்ள விரும்பும் இயன் மருத்துவர்களுக்குக் கைகொடுக்கப் புதிய பயிற்சிக் கட்டமைப்பு வரையப்பட்டுள்ளது. என்எச்ஜி ஹெல்த் குழுமமும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் (என்டியு) இணைந்து இக்கட்டமைப்பை உருவாக்கியுள்ளன. ரீஹபிலிட்டி எனப்படும் இந்தக் கட்டமைப்பு வியாழக்கிழமை (அக்டோபர் 23) தொடங்கப்பட்டது.

இந்தப் பயிற்சிக் கட்டமைப்பில் மூன்று அங்கங்கள் இடம்பெற்றுள்ளன. இயன் மருத்துவர்கள் அவர்கள் துறையில் முன்னேறத் தெளிவான பாதை அமைத்துத் தருவதும் மூத்த இயன் மருத்துவர்கள் கூடுதல் விரிவான, மேலும் உயர்நிலைப் பொறுப்புகளை வகிக்கக் கைகொடுக்கும் திறன்களை வளர்ப்பதும் இலக்குகளாகும்.

என்டியுவின் லீ கொங் சியான் மருத்துவப் பள்ளி இயன் மருத்துவர்களுக்காக நடத்தும் ஆற்றல் வளர்ப்புத் திட்டமும் (residency) இதில் அடங்கும். இத்திட்டத்தில் வகுப்பறைக் கல்வி, வேலையிடப் பயிற்சி இரண்டும் இடம்பெறும்.

இத்திட்டத்தின் மூலம் இதய மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் உள்ளிட்டவற்றைக் கையாள்வதற்கு மேம்பட்ட திறன்கள் வளர்க்கப்படும். எல்லா அமைப்புகளைச் சேர்ந்த இயன் மருத்துவர்களும் திட்டத்தில் பங்கேற்கலாம்.

இத்திட்டம் ஈரறை ஆண்டுகள் நடத்தப்படும். முதல் ஆண்டுப் பயிற்சிக்குப் பிறகு திட்டத்தில் பங்கேற்ற இயன் மருத்துவர்களுக்கு லீ கொங் சியான் மருத்துவப் பள்ளி பட்டக் கல்விச் சான்றிதழை வழங்கும்.

எஞ்சிய ஒன்றரை ஆண்டு காலத்தில் ஃபிளெக்சி மாஸ்டர்ஸ் எனும் ஒருவகை முதுநிலைப் பட்டக் கல்வி வழங்கப்படும். இது, இளநிலைப் பட்டக் கல்வியை முடித்தவர்களுக்கு வழங்கப்படும் டிப்ளோமாவுக்கு (graduate diploma) ஈடானது.

முதற்கட்டமாக அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து 104 இயன் மருத்துவர்கள் இத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவர்.

இந்த ஆற்றல் வளர்ப்புத் திட்டத்தை மேற்கொண்டு முடிப்போர் ஓராண்டு மறுவாழ்வு சுகாதார அறிவியல் முதுநிலைப் பட்டக் கல்விக்கு (MSc Rehabilitation Health Programme) முன்னேறுவர். முதற்கட்டமாக இந்த முதுநிலைப் பாடத் திட்டத்தில் 40 இயன் மருத்துவர்கள் வரை சேர்த்துக்கொள்ளப்படுவர்.

குறிப்புச் சொற்கள்