சிங்கப்பூர் சிறுவர் சங்கம் அதன் புதிய தலைவரையும் துணைத் தலைவரையும் தேர்ந்தெடுத்துள்ளது.
திரு கோ சூன் ஹுவியை அடுத்துச் சங்கத்தின் தலைமைப் பொறுப்பைத் திரு சியா சின் சியோங் ஏற்றுக்கொண்டார்.
பேராசிரியர் ஹோ லாய் யுன்னிடமிருந்து திருவாட்டி டான் கியாவ் ஙோ துணைத் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இந்தத் தகவல்களைச் சங்கம் வெள்ளிக்கிழமை (மே 2) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
புதிய தலைவர் சியா, தேசியத் தொண்டூழியர் மற்றும் நன்கொடையாளர் நிலையத்திற்கும் ‘ஐஷைன் கிளெட்’ எனும் மென்பொருள் அறநிறுவனத்துக்கும் தலைவராக உள்ளார்.
பொதுத் துறை, தனியார் துறை, சமூகத் துறைகளில் பல்வேறு தலைமைத்துவப் பொறுப்புகளை வகித்தவர் அவர். சிங்கப்பூர் நிர்வாகக் கழகம், சிங்கப்பூர் பூல்ஸ், ‘ஐடிஏ இன்டர்நேஷனல்’ நிறுவனம் ஆகியவற்றில் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவம் அவருக்குண்டு.
புதிய துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருவாட்டி டான், சங்கத்தின் இயக்குநர் சபையில் நீண்டகால உறுப்பினராகச் செயலாற்றிவருகிறார்.
1999ஆம் ஆண்டிலிருந்து சங்கத்திற்குப் பங்களிக்கும் அவர், அதன் சமூகச் சேவைப் பிரிவிலும் கணக்குத் தணிக்கைப் பிரிவிலும் தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

