சிங்கப்பூரில் 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 4,634 தனியார் வீடுகள் விற்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் விற்கப்பட்ட 1,889 வீடுகளின் எண்ணிக்கையைவிட, இது இரு மடங்கு அதிகமாகும்.
ஆண்டு அடிப்படையில், 2023ன் முதல் அரையாண்டில் விற்கப்பட்ட 3,383 வீடுகளைவிட இந்த எண்ணிக்கை 37 விழுக்காடு அதிகம். 2022இன் முதல் அரையாண்டு காலத்தில் விற்கப்பட்ட 4,222 யூனிட்டுகளைவிட கிட்டத்தட்ட 10 விழுக்காடு அதிகம்.
பள்ளி விடுமுறைக் காலமான ஜூன் மாதத்தில் விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை மாத அடிப்படையில் 12.8 விழுக்காடு சரிந்த போதிலும், செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) நகர மறுசீரமைப்பு ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் வலுவான நிலையைக் காட்டின.
2025ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் புதிய அறிமுகங்கள் குறைவாகவே இருந்ததால், மே மாதத்தில் மாதாந்திர விற்பனை குறைந்து, 312 புதிய தனியார் வீடுகளே விற்கப்பட்டன.
புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதால், வரும் மாதங்களில் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சொத்துச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில், சிங்கப்பூரெங்கும் கிட்டத்தட்ட 4,154 புதிய வீடுகள் அறிமுகம் காண இருப்பதாக இஆர்ஏ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்கஸ் சூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.