அடுத்த ஆண்டு ஜூன் 19ஆம் தேதியிலிருந்து மின்சார நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தை ரத்துசெய்யப் பயனீட்டாளர்களுக்குக் கூடுதல் வசதிகள் இருக்கும்.
முன்னெச்சரிக்கை எதுவும் இன்றி அத்தகைய ஒப்பந்தங்கள் தன்னிச்சையாகப் புதுப்பிக்கப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து புதிய நடைமுறை நடப்புக்கு வரவிருக்கிறது.
மின்சார ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவதற்கு 60 நாள்களுக்குமுன் அதை ரத்து செய்யும் பயனீட்டாளர்களுக்கான கட்டணத்தை மின்சார நிறுவனங்கள் தள்ளுபடி செய்யவேண்டும் என்று எரிசக்திச் சந்தை ஆணையம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) தெரிவித்தது.
இதற்குமுன், மின்சார ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவதற்கு 30 நாள்களுக்குமுன் அதை ரத்து செய்வோருக்கு மட்டும் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மின்சார ஒப்பந்தங்கள் தன்னிச்சையாகப் புதுப்பிக்கப்படுவது குறித்த தகவல்களைப் பார்க்கத் தவறிய பயனீட்டாளர்கள் சிலர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முற்பட்டபோது கூடுதல் கட்டணம் செலுத்த நேரிட்டதாகப் புகார் அளித்தனர்.
மேலும் மின்சார நிறுவனங்கள் தன்னிச்சையாகப் புதுப்பிக்கப்படும் ஒப்பந்தம் பற்றிப் பயனீட்டாளர்களுக்கு ஒருமுறைக்குப் பதிலாக இரண்டு முறை நினைவுபடுத்தவேண்டும் என்று எரிசக்திச் சந்தை ஆணையம் குறிப்பிட்டது.
“ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவதற்கு 10 நாள்களுக்குமுன் முதல் தகவல் அனுப்பப்படவேண்டும். இரண்டாவது நினைவூட்டல் மூன்று நாள்களுக்குமுன் அல்லது புதுப்பிக்கப்படும் நாளில் அனுப்பப்படவேண்டும்,” என்று ஆணையம் சொன்னது.
அத்தகைய நினைவூட்டல் மின்னஞ்சல், அஞ்சல், குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் ஆகியவை மூலம் அனுப்பப்படவேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் மின்சார நிறுவனங்களுடன் இணைந்து கலந்துரையாடிய பிறகே புதிய நிபந்தனைகள் உருவாக்கப்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டது.
கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 45,000 மின்சார ஒப்பந்தங்கள் தன்னிச்சையாகப் புதுப்பிக்கப்பட்டன.
புதிய விதிமுறைகள் எஸ்பி குழுமப் பயனீட்டாளர்களுக்குப் பொருந்தாது.
சிங்கப்பூரில் தற்போது 10 நிறுவனங்கள் மின்சாரத்தை விநியோகம் செய்கின்றன.

