பாலியல் குற்றங்கள் குறித்துப் புகாரளிப்போர் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்யப்படும்போது பொருத்தமற்ற கேள்விகளை எதிர்கொள்வதிலிருந்து பாதுகாக்கும் புதிய நடைமுறைகள் நடப்புக்கு வந்துள்ளன.
சிங்கப்பூர் நீதிமன்றங்களில் ஜனவரி 13ஆம் தேதி நடப்புக்கு வந்த இந்தப் புதிய நடைமுறைகள், நியாயமான விசாரணையை எதிர்கொள்வது தொடர்பான குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமையையும் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது.
விசாரணைக்கு முந்தைய கட்டத்தில், குறுக்கு விசாரணையில் ஆராயப்படும் சாத்தியமுள்ள, சர்ச்சைக்குரிய விவகாரங்களை அடையாளம் காண உதவும் சரிபார்ப்புப் பட்டியலைப் பயன்படுத்தும் முன்னோடித் திட்டத்தை நீதித்துறை செயல்படுத்தும்.
விசாரணையின்போது, புகாரளித்தவரிடம் பொருத்தமற்ற அல்லது அவமதிக்கக்கூடிய கேள்விகள் கேட்கப்படுவதை நீதிபதி தடுக்க இது உதவும்.
மேலும், குறிப்பிட்ட சில பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை அனுபவமிக்க, சிறப்புப் பயிற்சி பெற்ற நீதிபதிகள் விசாரித்துத் தீர்ப்பளிப்பர் என்று கூறப்பட்டது.
புதிய சட்ட ஆண்டின் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் இந்தப் புதிய நடைமுறைகள் குறித்து அறிவித்தார்.
“புகாரளித்தவர், குற்றம் சாட்டப்பட்டவர் என இருதரப்பினர் மீதும் விசாரணை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இத்தகைய வழக்குகளை மிகக் கவனமாகக் கையாள வேண்டும்,” என்று தமது உரையில் அவர் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே, இத்தகைய வழக்குகளில் நீதிபதிகள் கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியிருந்தார். 16 வயதுச் சிறுமியை 42 வயது ஆடவர் மானபங்கம் செய்தது தொடர்பான வழக்கில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் அவர் அவ்வாறு கூறியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
புதிய நடைமுறைகள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த சிங்கப்பூர் நீதிமன்றப் பேச்சாளர், ஒவ்வொரு குற்ற வழக்கிலும் விசாரணைக்கு முந்தைய சந்திப்பு நாளுக்குக் குறைந்தது ஏழு நாள்களுக்குமுன் சரிபார்ப்புப் பட்டியலை இருதரப்பினரும் சமர்ப்பிக்கும் நடைமுறை தற்போது நடப்பில் உள்ளது என்றும் புதிய நடைமுறையின்கீழ் அவர்கள் விசாரணையின்போது எழக்கூடிய விவகாரங்கள் பற்றியும் குறிப்பிட வேண்டியுள்ளது என்றும் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பும் சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்துத் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு சாட்சியையும் விசாரிக்க எவ்வளவு நேரம் தேவை என்பதற்கான மதிப்பீட்டையும் குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டது.
குறிப்பிட்ட சில பாலியல் வழக்குகளை விசாரிப்பதற்கான நீதிபதிகள் பட்டியலில் 23 பேர் உள்ளதாகப் பேச்சாளர் கூறினார். அவர்களில் 11 பேர் உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்றும் 12 பேர் அரசு நீதிமன்றங்களைச் சேர்ந்த மாவட்ட நீதிபதிகள் என்றும் கூறப்பட்டது.

