சிங்கப்பூரை மையமாகக் கொண்ட உள்ளடக்கங்களை உருவாக்கப் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள $48 மில்லியன் மதிப்பிலான திட்டம் உள்ளூர் ஊடக நிறுவனங்களுக்கு கைகொடுக்கவுள்ளது. செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்திப் பார்க்கவும் நிறுவனங்கள் அந்த நிதியைப் பயன்படுத்தலாம்.
வேகமாக மாறிவரும் மக்களின் ரசனைக்கு இடையே செயல்படும் ஊடகத் துறையில் புதிய வாய்ப்புகளைக் கைப்பற்ற புதிய மின்னிலக்க உள்ளடக்க, திறன் மேம்பாட்டுத் திட்டம் உதவும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணையமைச்சர் டான் கியெட் ஹாவ் தெரிவித்தார். அவர், நான்கு ஆண்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துவைத்து பேசினார்.
“இது, மனித உணர்வுகளுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவையோ தொழில்நுட்பத்தையோ பயன்படுத்தும் முயற்சி அல்ல. மாறாக, செயற்கை நுண்ணறிவு மூலம் கதைகளைச் சொல்லி புதிய பார்வையாளர்களை ஈர்ப்பதற்கான முயற்சி,” என்றார் அவர்.
சிங்கப்பூரில் தொழில்நுட்ப மாற்றம் இன்னும் சூடுபிடிக்கத்தான் போகிறது என்ற திரு டான், அத்தகைய மாற்றத்தை நம்மால் மறுக்க முடியாது என்றார்.
உள்ளூர்ப் பார்வையாளர்களைக் கூடுதலாக ஈர்ப்பதற்கு புதிய வகையில் உள்ளடக்கங்களை உருவாக்கி விநியோகம் செய்ய உள்ளூர் ஊடக நிறுவனங்களுக்குப் புதிய திட்டம் ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்டது தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம்.
இளையர்களுக்கு உகந்த வகையில் சிங்கப்பூரின் கதைகளைச் சொல்வது, பெரியோரையும் மூத்தோரையும் கவர ஏற்ற முறையில் உள்ளடக்கங்களைத் தயாரிப்பது ஆகியவை திட்டத்தில் அடங்கும் என்று ஆணையம் குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் 15 வயதுக்கு மேற்பட்டோரில் கிட்டத்தட்ட 87 விழுக்காட்டினர் டிக்டாக், இன்ஸ்டகிராம் ஆகிய சமூக ஊடகத் தளங்களில் வரும் காணொளிகளையே வாரந்தோறும் பார்ப்பதாகச் சிங்கப்பூர் தொலைகாட்சிப் பார்வையாளர் அளவீட்டுக் கட்டமைப்பின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
குறுங்காணொளிகள், குறுநாடகங்கள் ஆகியவற்றுடன் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட தயாரிப்புகளும் உள்ளடக்கங்களும் புதிய தலைமுறையினர் இடையே பிரபலமாகிவருவதாக ஆணையம் சுட்டியது.
தொடர்புடைய செய்திகள்
ஆணையத்தின் புதிய திட்டத்தில் இணையும் ஊடக நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உள்ளடக்கங்களைத் தயாரிப்பது, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது போன்ற ஆதரவைப் பெறும்.
திட்டத்தில் இணைய, நிறுவனங்கள் தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கவேண்டும்.
இவ்வாண்டு ஏப்ரல், மே மாதங்களில் 117 ஊடக நிறுவனங்கள் அவற்றின் அங்கீகாரத்தைப் பெற்றன.

