தாமதமாகத் தொடங்கினாலும் நிலையான முயற்சிகள் மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் என நம்புகிறார் பொறியியல் கல்வி பயின்று, காவல்துறையில் பணியாற்றி, பின்னர் சட்டத் துறையில் நுழைந்துள்ள முகம்மது ரியாசுதீன், 41.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பொறியியல் துறையில் பயின்றபோதே இது தனக்கு விருப்பமான துறை இல்லை என்பதை முடிவு செய்தார் ரியாசுதீன்.
பின்னர், காவல்துறையில் சார்ஜண்டாகப் பணியில் சேர்ந்து, அதன் பிறகு சட்ட அமலாக்கத்தின் மீது வந்த ஆர்வத்தால் லண்டன் பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டக் கல்வி பயின்றார். பின்னர் மனிதவள அமைச்சில் பணிக்குச் சேர்ந்தார்.
“நல்ல படிப்பு, அரசுப்பணி, நிலையான வருமானம், குடும்பம், குழந்தைகள் என நல்ல நிலையை எட்டிவிட்டாலும், கல்விக்கும் முன்னேற்றத்திற்கும் முற்றுப்புள்ளியே இல்லை எனும் எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு,” என்றார் ரியாசுதீன்.
இதே துறையில் மேலும் கல்வி பயிலும் உந்துதல் ஏற்பட்டு கடந்த 2020ஆம் ஆண்டு சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் (எஸ்யுஎஸ்எஸ்) ஜூரிஸ் டாக்டர் (Juris Doctor) படிப்பில் இணைந்தார்.
பணிச்சுமை, படிப்பு என அனைத்தையும் ஒருங்கே கையாள்வது சிரமமாக இருந்தாலும் எடுத்த செயலை முடிக்காமல் விடக்கூடாது என்ற முனைப்புடன் அயராது உழைத்து சிறந்த மாணவராகத் (Valedictorian) தேர்ச்சி பெற்றுள்ளார் இவர்.
“காவல்துறைப் பணிதான் தன்னம்பிக்கை அளித்தது,” என்று சொன்ன ரியாசுதீன், கல்வியின் முக்கியத்துவத்தையும் மதிப்பையும் அறிந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
“பெரிய எதிர்பார்ப்புகளின்றி உழைத்த நிலையில், கைமேல் பலன் கிட்டியதுபோல அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகத்தில் அரசுத் துணை வழக்கறிஞராகப் பணியில் அமர்ந்துள்ளேன் (Deputy Public Prosecutor/State Counsel at the Attorney-General’s Chambers). காவல்துறைப் பணியின்போது நான் பார்த்து வியந்த பதவியில் இன்று நானே அமர்ந்திருக்கிறேன். இது உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி என்பதில் பெருமை,” என்றார் ரியாசுதீன்.
விமானியாகும் ஆர்வமுள்ளோர்க்குப் புதிய படிப்பு அறிமுகம்
விமானியாகும் விருப்பமுள்ள மாணவர்கள் நான்கு ஆண்டுகளுக்குள் இளநிலைப் பட்டத்துடன் விமானம் ஓட்டும் உரிமத்தையும் (Commercial pilot licence) பெற வகைசெய்யும் புதிய பாடத் திட்டத்தை அறிவித்துள்ளது சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்.
அக்டோபர் 8ஆம் தேதி நடைபெற்ற அதன் பட்டமளிப்பு விழாவில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் இதை அறிவித்தார்.
இதற்கு முன்பு இளநிலைப் படிப்புக்கு நான்கு ஆண்டுகளும் விமானம் ஓட்டும் உரிமம் பெற ஈராண்டுகளும் தேவைப்படும்.
சிங்கப்பூர் விமானிப் பயிற்சிக் கல்லூரி (Singapore Flying College) உடன் இணைந்து பல்கலைக்கழகம் வழங்கும் இந்தப் பகுதிநேர இளநிலைப் பட்டக்கல்வி 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. 25 மாணவர்களுடன் தொடங்கப்படும் இந்தக் கல்வித்திட்டம், ஒரே நேரத்தில் பட்டமும் விமானி உரிமமும் வழங்கும் முதல் திட்டமாகும்.
இந்தப் படிப்பில், வணிகப் பகுப்பாய்வு, நிதி, மனிதவள மேலாண்மை, தகவல் தொடர்புத் தொழில்நுட்பம், தளவாடங்கள், விநியோகச் சங்கிலி (logistics and supply chain) மேலாண்மை, சந்தைப்படுத்தல், உளவியல் உள்ளிட்ட இளநிலைப் பட்டத்துடன் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்துக் கழகம் வழங்கும் விமானி உரிமத்தையும் பெறலாம்.
இந்தப் படிப்பில் சேர 2024 அக்டோபர் முதல் 2025 மார்ச் வரை விண்ணப்பிக்கலாம்.
பட்டமளிப்பு விழா
சன்டெக் சிட்டி மாநாட்டு மையத்தில் அக்டோபர் 8, 9 ஆம் தேதிகளில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 2023ஆம் ஆண்டு சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் படிப்பை நிறைவுசெய்த ஏறத்தாழ 3,200 மாணவர்கள் பட்டம் பெற்றனர். நிகழ்ச்சிக்குப் பல்கலைக்கழக வேந்தர் ஹலிமா யாகோப் தலைமை தாங்கினார்.
