அறிவாற்றல் குறைபாடு, உடல் செயலிழப்பு ஆகியவற்றைச் சமாளிக்கும் நோக்கில், சிங்கப்பூர் 350 மில்லியன் வெள்ளி மதிப்பிலான ஆராய்ச்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
மிக விரைவில் மூப்படைந்துவரும் சமுதாயம் எதிர்நோக்கும் இரண்டு முக்கியச் சுகாதாரச் சவால்களுக்குத் தீர்வுகாண சிங்கப்பூர், தனியார் நிறுவனங்களின் உதவியை நாடுகிறது.
அறிவாற்றல் குறைபாடு, உடல் செயலிழப்பு ஆகியவை தொடங்கும் முன்பே தடுப்பதற்கான அல்லது அவற்றின் தீவிரத்தைக் குறைப்பதற்கான அணுகுமுறைகளையும் தலையீடுகளையும் உருவாக்குவதே ‘மாபெரும் சவால்’ திட்டத்தின் நோக்கமாகும்.
முன்தடுப்புப் பராமரிப்பில் கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்த, பொது, தனியார்த் துறைகள் ஒருங்கிணைவதற்கான ஒரு தளமாக அது அமையும்.
“பல உகந்த ஆற்றல்கள், தொழில்நுட்பங்கள், திறன்கள் தனியார் துறையில் உள்ளன. இருப்பினும், தனியார் துறைக்கும் நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திடம் இருக்கும் உயர்தர, விரிவான தரவுகள் கிடையாது.
“பொது, தனியார் துறைகளின் வலிமைகளை ஒன்றிணைத்தால், நாம் அர்த்தமுள்ள, உருமாற்றக்கூடிய மேம்பாடுகளைச் செய்யலாம்,” என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் வெள்ளிக்கிழமை (மே 22) கூறினார்.
தொழில்துறைச் சார்ந்தவர்கள் உள்ளூர் ஆராய்ச்சியாளர்களுடனும் கல்வி நிலையங்களுடனும் சேர்ந்து வலுவான, இலக்குகளை எட்டக்கூடிய திட்டங்களை உருவாக்கலாம். அதன் பின்னர், அத்திட்டங்கள் சிங்கப்பூரின் பராமரிப்புச் சூழலில் சோதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படலாம் என்றார் அவர்.
சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஓங், ‘பார்க் ராயல் கலெக்ஷன்’ மரினா பே சிங்கப்பூரில் நடைபெற்ற ‘தேசிய மருத்துவ ஆராய்ச்சி மன்ற விருதுகள் நிகழ்வு மற்றும் ஆராய்ச்சிக் கருத்தரங்கு 2026’ல் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
‘ஆரோக்கியமாகவும் வெற்றிகரமாகவும் வாழ்நாளை நீட்டித்தல்’ என்றழைக்கப்படும் அந்த மாபெரும் சவால் திட்டம், மே 22ஆம் தேதி தொடங்கப்பட்டது. அது சிங்கப்பூரின் 37 பில்லியன் வெள்ளி மதிப்பிலான ஆய்வு, புத்தாக்கம், தொழில்முனைப்பு 2030 திட்டத்தின்கீழ் இடம்பெறுகிறது.
அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சுகாதார அமைச்சு 2.5 பில்லியன் வெள்ளியை ஒதுக்கும் என்று திரு ஓங் தெரிவித்தார்.
முதன்முதலாக 2025ஆம் ஆண்டு டிசம்பரில் அறிவிக்கப்பட்ட ‘ஆரோக்கியமாகவும் வெற்றிகரமாகவும் வாழ்நாளை நீட்டித்தல்’ திட்டம், 2031ஆம் ஆண்டுவரை ஐந்தாண்டுகளுக்குச் செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

