சிங்கப்பூரில் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் டெங்கி நோய் அபாயம் பெருங்கவலையாக மாறிவரும் நிலையில், குழந்தைகளிடம் காலநிலை மற்றும் சுகாதார மீள்திறனை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய திட்டம் அறிமுகம் கண்டுள்ளது.
‘கெட் ஃபிட்! கெட் லிட்!’ (Get Fit! Get Lit!) என்பது புதிய திட்டத்தின் பெயர். இத்திட்டத்தின் மூலம் 7 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கிட்டத்தட்ட 3,000 பேர் 2027ஆம் ஆண்டிறுதிக்குள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், குழந்தைகளுக்குப் பண மேலாண்மையில் வாழ்க்கைத் திறன்களை வளர்க்கவும் இத்திட்டம் உதவும்.
தென்கிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றம், புரூடென்ஷியல் காப்புறுதி நிறுவனம் ஆகியவை இணைந்து ஒரு கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தின.
கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சரும் தென்கிழக்கு வட்டார மேயருமான தினேஷ் வாசு தாஸ் இத்திட்டத்தைச் சனிக்கிழமை (ஜூன் 27) சிக்லாப் சமூக மன்றத்தில் அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்தார்.
“தென்கிழக்கு வட்டாரம் முழுவதும் உள்ள பள்ளிகள், சமூக அமைப்புகளுக்கு இந்த முயற்சியைக் கொண்டுசெல்வதன் மூலம், முடிந்தவரை அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளின் எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளத்தை எங்களால் வழங்க இயலும்,” என்றார் அவர்.
வகுப்பறைக் கற்றல்வழி வழங்கப்படும் இந்தத் திட்டம், மாறிவரும் காலநிலை அவர்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதையும், நலமாகவும் சூழ்நிலைக்கு ஏற்பவும் இருக்க குழந்தைகள் எடுக்கக்கூடிய எளிய நடவடிக்கைகள் என்னென்ன என்பதையும் புரிந்துகொள்ள உதவும். மேலும், சம்பாதித்தல், சேமித்தல், செலவிடுதல், நன்கொடை அளித்தல் ஆகிய முக்கிய நிதி சார்ந்த கருத்துகளையும் இத்திட்டம் கற்றுத்தரும்.
சிஎச்ஐஜே (காத்தோங்) தொடக்கப்பள்ளி, செயின்ட் கேபிரியல்ஸ் தொடக்கப்பள்ளி, கேலாங் மெதடிஸ்ட் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட 15 பள்ளிகளை இப்புதிய திட்டம் சென்றடையும். அத்துடன் சமூகப் பங்காளர்களான ‘டிரான்ஸ்’, ‘தாய் ஹுவா குவான்’ ஆகிய குடும்பச் சேவை மையங்கள் இத்திட்டத்தை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

