ஒற்றையருக்கான புதிய வீவக திட்டம்: 80% அறைகள் வாடகைக்கு விடப்பட்டன

2 mins read
cc4440d8-bd8c-42b1-83a1-c88f13b580bf
அங் மோ கியோ அவென்யூ எட்டில் அமைந்துள்ள குறைந்த வருமான ஒற்றையருக்கான வீவக வாடகைத் திட்டத்தில் உள்ள துணி துவைக்கும் இயந்திரங்கள். - படம்: சாவ்பாவ்

ஒற்றையருக்கு வாடகைக்கு விடுவதற்கான புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழகத் (வீவக) திட்டத்தில் ஏறத்தாழ 400 ஒற்றையர், அதிலுள்ள அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

இத்திட்டத்தின் மூலம் குறைந்த வருமான ஒற்றையர் தங்களுக்கென ஓர் அறையை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். கழிப்பறைகள், சமையலறைகள் போன்ற வசதிகளை அவர்கள் இதர வாடகைதாரர்களுடன் சேர்ந்து பயன்படுத்துவர்.

புதிய ஒற்றையருக்கான வீவக வாடகைத் திட்டத்தின் வாடகைதாரர்கள் குறித்து தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ வியாழக்கிழமை (மார்ச் 20) அறிவித்தார். இந்தப் புதிய வகை வீடமைப்புத் திட்டத்துக்கு இதுவரை நம்பிக்கை தரும் வகையில் வரவேற்பு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இப்புதிய திட்டம், முன்பு ஆண்டர்சன் தொடக்கக் கல்லூரி இருந்த அங் மோ கியோ அவென்யூ 8-ல் அமைந்துள்ளது. ஓரறைப் பகிர்வு வசதிகள் (SRSF) எனும் இந்தத் திட்டத்தின்கீழ் 11 தளங்களைக் கொண்ட இரு கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 480 வாடகைதாரர்கள் வரை வசிக்க முடியும்.

இத்திட்டம் அறிமுகமாகி ஓராண்டுக்கு சற்றே அதிக காலம் ஆகியிருக்கும் நிலையில் இக்கட்டடங்களில் கிட்டத்தட்ட 83 விழுக்காட்டு அறைகள் வாடகைக்கு விடப்பட்டுவிட்டன. 2023ஆம் ஆண்டிறுதியில் தொடங்கப்பட்ட ஓரறைப் பகிர்வு வசதிகள் திட்டம், குறைந்த வருமான ஒற்றையருக்குக் கூடுதல் குறுக்கீடற்ற தனிமை வழங்குவதுடன் பகிர்வு வசதிகள் வாயிலாக சமூகமாக வாழ்வதற்கான சூழலையும் உருவாக்கித் தரும் இலக்கைக் கொண்டுள்ளது.

வாடகைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் அறை இருக்கும். அதில் கட்டில், மேசை, சிறு குளிர்பதனப்பெட்டி போன்ற வசதிகள் அவரவருக்கென இருக்கும்.

அதேபோல் கழிப்பறைகள், சமையலறைகள், சலவை வசதி போன்றவற்றை வாடகைதாரர்கள் சேர்ந்து பயன்படுத்திக்கொள்வர்.

ஒற்றையருக்கான இந்த வாடகை வீடமைப்புத் திட்டத்தை நடத்தவும் வாடகை சார்ந்த விவகாரங்களைக் கவனித்துக்கொள்ளவும் வாடகைதாரர்களுக்கு சமூக ரீதியான ஆதரவை வழங்கவும் வீவக, சமூக சேவை அமைப்பான நியூ ஹோப் கம்யூனிட்டி சர்விசஸ் (NHCS) அமைப்பை நியமித்துள்ளது.

இந்தப் புதிய திட்டம், ஏற்கெனவே நடப்பில் இருந்துவரும் குறைந்த வருமான ஒற்றையருக்கான ஜேஎஸ்எஸ்-ஓஆர் (JSS-OR) வாடகைத் திட்டத்துடன் சேர்ந்து நடப்பில் இருக்கும் என்று அமைச்சர் லீ, ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்