ஆசிய-பசிபிக் வட்டாரத்துக்கான நீடித்த நிலைத்தன்மையான விமானப் போக்குவரத்தில் ஒத்துழைப்பு, பயிற்சிகளை ஆய்வுசெய்து நடத்தும் புதிய வட்டார மையம் வியாழக்கிழமை (ஜூலை 10) சிங்கப்பூரில் தொடங்கப்பட்டது.
சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அமைத்துள்ள ஆசிய-பசிபிக் நீடித்த நிலைத்தன்மையான விமானப் போக்குவரத்து மையம், இவ்வட்டாரத்தின் பொருளியல் வளர்ச்சி, நீடித்த நிலைத்தன்மை இலக்குகள் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்த உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
விமானப் போக்குவரத்தில் பொருளியல் மேம்பாட்டையும் நீடித்த நிலைத்தன்மை இலக்குகளையும் ஒரே நேரத்தில் கையாள இந்த வட்டாரத்துக்கு உதவுவதை மையம் இலக்காகக் கொண்டுள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை இயக்குநர் ஹான் கோக் ஜுவான் கூறினார்.
சாங்கி விமான நிலையத்திலுள்ள ஆணையத்தின் அலுவலகத்தில் வியாழக்கிழமை அவர் ஊடகவியலாளர்களிடம் பேசினார்.
ஆசிய-பசிபிக் வட்டாரத்தை மையமாகக்கொண்டு கொள்கை ஆய்வு, திறன் மேம்பாட்டை முன்னெடுக்கும் உலகின் முதல் மையம் இது.
அடுத்த 20 ஆண்டுகளில் ஆசிய-பசிபிக் வட்டாரத்தின் விமானப் பயணத் தேவை வலுவாகவும் மும்மடங்காகவும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த மையம் அமைக்கப்படுவதாக திரு ஹான் குறிப்பிட்டார்.
நாடுகளின் தேசிய சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு, அவற்றின் நிலைத்தன்மை இலக்குகளை முன்னெடுத்துச் செல்வதற்கான கொள்கைத் தேர்வுகள், வழிவகைகளின் பட்டியலை மையம் வழங்கும்.
நிகர-பூஜ்ஜிய கரிம உமிழ்வை ஆதரிப்பதில் இவ்வட்டார நாடுகள் உறுதியாக இருப்பதால், நீடித்த நிலைத்தன்மை இலக்குகளை நிறைவேற்றும் அதேவேளையில் வளர்ச்சியை உறுதி செய்ய அவற்றுக்கு ஒரு வழி தேவை என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
விமானப் போக்குவரத்து, எரிசக்தி, பசுமை நிதி வசதிச் சேவை ஆகிய துறைகளைச் சேர்ந்த பங்காளிகளின் மூத்த நிர்வாகிகளைக் கொண்ட ஓர் ஆலோசனை மன்றம், இந்த மையத்தை அதன் பணிகளில் வழிநடத்தும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

