பாசிர் ரிஸ் கடற்கரையில் புதிய உல்லாசத் தளம்

1 mins read
894b1393-7b80-4e44-b462-1f188d84a0dc
கலைஞரின் சித்திரிப்பில் பாசிர் ரிஸ் கடற்கரை, டௌன்டவுன் ஈஸ்ட், வைல்ட் வைல்ட் வெட்டில் அமைக்கப் பரிந்துரைக்கப்படும் உல்லாசத் தளம். - படம்: கோலிவூ

எல்எச்என் குழுமத்தின் சேர்ந்து வாழும் குடியிருப்புகளுக்கான கோலிவூ பிரிவிற்கு, பாசிர் ரிஸ் வட்டாரத்தில் உள்ள அரசாங்கச் சொத்தை மறுமேம்பாடு செய்வதற்கான குத்தகை வழங்கப்பட்டுள்ளது.

அங்கு 350 உல்லாசத் தளக் குடியிருப்புகளைக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

எண் 159 லோயாங் புசாரில் அமைந்துள்ள நிலப்பரப்பில் இத்தகைய உல்லாசத் தள வீடுகளைக் கட்டுவதற்குச் சிங்கப்பூர் நில ஆணையம் அறிவித்த ஏலக் குத்தகைக்கு கோலிவூ கெப்பலையும் சேர்த்து ஐந்து நிறுவனங்கள் விண்ணப்பம் செய்திருந்தன.

அவை, $98,000 முதல் $225,900 வரை ஏலத் தொகையாகக் குறிப்பிட்டிருந்தன. கோலிவூ நிறுவனம் $225,000 ஏலத் தொகையாகக் குறிப்பிட்டிருந்தது. அது இரண்டாவது ஆகப் பெரிய தொகையாகும்.

380,866 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலப் பகுதியில் அந்த அரசாங்கச் சொத்து அமைந்துள்ளது. தற்போது அதில் இரண்டு தளங்கள் கொண்ட 20 கட்டடங்களும், நான்கு ஒற்றைத் தளக் கட்டடங்களும் சில வாகன நிறுத்துமிடங்களும் அமைந்துள்ளன.

அந்த இடம் பாசிர் ரிஸ் கடற்கரை, டௌன்டவுன் ஈஸ்ட், வைல்ட் வைல்ட் வெட் ஆகியவற்றுக்கு அருகே அமைந்துள்ளது.

அங்குப் புதுப்பிப்புப் பணிகள் இந்த ஆண்டுப் பிற்பாதியில் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நீச்சல் குளங்கள், உள்ளரங்க, வெளிப்புற விளையாட்டு வசதிகள், தியானம் செய்வதற்கேற்ற தோட்டங்கள் என உடல்நலத்தை மையமாகக் கொண்ட பல்வேறு வசதிகளை விருந்தினர்கள் எதிர்பார்க்கலாம் என்று கோலிவூ தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்