பிள்ளைகளின் இணைய விளையாட்டுப் பழக்கத்தைப் புரிந்துகொள்ளவும் அவற்றைக் கையாளவும் உதவும் பெற்றோருக்கான புதிய கல்வி வளங்களும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இணைய வினாடி வினாக்கள், ‘பிளிஃப்போர்ட்’ சமூக இதழ் செயலிகள் போன்ற கல்வி வளங்கள், உரையாடல் அட்டைகள் போன்றவை அவற்றில் அடங்கும்.
குடும்பத்தினர் ஒன்றிணைந்து மின்னிலக்க எல்லைகள், இணையப் பாதுகாப்பு, விளையாட்டில் பெற்றோரின் பங்களிப்பு குறித்துப் பேச அவை உதவும்.
வாழ்நாள் மின்னிலக்கமயமாதல் இயக்கத்தின் ஒரு பகுதியாக தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் டென்சென்ட் இணைய நிறுவனமும் இணைந்து ‘திரைக்கு அப்பால்: நலமான மின்னிலக்க விளையாட்டு’ (பியாண்ட் த ஸ்கிரீன்: ஹெல்த்தி டிஜிட்டல் பிளே) என்ற முயற்சியை முன்னெடுத்துள்ளன.
இவ்வளங்கள் குறித்த முதல் கண்காட்சி ஜூன் மாதப் பள்ளி விடுமுறையில் உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் நடைபெறும்.
அக்டோபரில் ஹார்பர்ஃபிரண்ட் சென்டர் நூலகத்திலும், டிசம்பர் விடுமுறையில் ஜூரோங் வட்டார நூலகத்திலும் கண்காட்சிகளும் ஒரு மணிநேரப் பயிலரங்குகளும் நடத்தப்படும்.
இந்த ஆண்டிற்குள் சிங்கப்பூரில் 4,000 பேரைச் சென்றடைவது இலக்கு.
சி யுவான் சமூக மன்றத்தில் சனிக்கிழமை (மே 2) நடைபெற்ற ‘திரைக்கு அப்பால்: நலமான மின்னிலக்க விளையாட்டு’ திட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய மின்னிலக்க மேம்பாடு, தகவல் துணை அமைச்சர் ஜாஸ்மின் லாவ் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இக்காலத்தில் பிள்ளை வளர்ப்பது கடினமானது. பலர் பிள்ளைகளைச் சமாளிக்க மின்னலக்க சாதனங்களை நாடுகள். அது குழந்தைகளுக்கு சிறந்ததல்ல என்பது அவர்களுக்குத் தெரியும்.
தங்கள் பிள்ளைகளின் மின்னிலக்க நல்வாழ்வை நிர்வகிக்க 37 விழுக்காடு பெற்றோர் அரசாங்க ஆதரவை நாடுவதாக 2025ஆம் ஆண்டு மின்னிலக்க மேம்பாடு, தகவல் அமைச்சு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது என்றார் அவர்.
பிள்ளைகளின் மின்னிலக்க நல்வாழ்வை மேம்படுத்துவது என்பது பெற்றோர் மட்டும் சுமக்க வேண்டிய சுமையல்ல. இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க அனைத்துப் பங்காளிகளும் ஒன்றிணைவது மகிழ்ச்சியளிக்கிறது என்று கல்வித் துணை அமைச்சருமான திருவாட்டி ஜாஸ்மின் கூறினார்.
பாலமாக அமையும் விளையாட்டுகள்
இணைய விளையாட்டுகளை முற்றிலும் தடை செய்யாமல், அவற்றைப் புரிந்துகொண்டு தொடக்கத்திலேயே கண்காணிப்பது முக்கியம் என்று ‘இம்பார்ட்’ அமைப்பின் இணை நிறுவனர் நரசிம்மன் திவசிஹா மணி தெரிவித்தார்.
மின்னிலக்க விளையாட்டு என்பது சமூகத் தொடர்புகளை உருவாக்கவும், குழுச் செயல்பாடு, படைப்பாற்றலை வளர்க்கவும் ஒரு நவீன வழி என்றார் டென்சென்ட் சிங்கப்பூர் மேலாளர் மர்பி ஜாவோ.
இந்தத் திட்டத்திற்காக டென்சென்ட் நிறுவனம் வாழ்நாள் மின்னிலக்கமயமாதல் நிதிக்கு $25,000 வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் இணை நிதியுடன் மொத்தம் $50,000 திரட்டப்பட்டுள்ளது.
இணைய விளையாட்டுகள், சமூகத் தொடர்பில் கவனம் செலுத்தும் சீனாவில் தொடங்கப்பட்ட டென்சென்ட் நிறுவனம், ஆசியான் வட்டாரத்தில் முதன்முதலாக சிங்கப்பூரில் இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டில் தென்கிழக்கு ஆசியாவின் பிற நாடுகளுக்கும் இது முன்மாதிரியாக விரிவுபடுத்தப்பட உள்ளது என்று அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
இம்முயற்சியின் மூலம் விளையாட்டு என்பது குடும்பங்களுக்குள் பகிர்ந்துகொள்ளும் அனுபவமாகவும் பாதுகாப்பானதாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

