கட்டடப் பாதுகாப்பை மேலும் நடைமுறைக்கு ஏற்றதாக, சுமை குறைவானதாக மாற்றுவதற்கு புதிய மறுஆய்வு

கட்டடப் பாதுகாப்பை மேலும் நடைமுறைக்கு ஏற்றதாக, சுமை குறைவானதாக மாற்றுவதற்கு புதிய மறுஆய்வு

1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

10 Nov 2026 - 7:23 pm

2 mins read

பாதுகாக்கப்பட்ட கட்டடங்களைப் பராமரிப்பது, தற்போதுள்ள விதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள மறுஆய்வின் மூலம், கட்டட உரிமையாளர்களுக்கு இன்னும் நடைமுறைக்கு ஏற்றதாகவும், சுமை குறைந்ததாகவும் மாற்றப்படலாம் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட், செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 10) தெரிவித்தார்.

குறிப்பாக, குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் சில பணிகளை, அனுமதி கோரும் நடைமுறைகளிலிருந்து விலக்க முடியுமா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம் உரிமையாளர்கள் வழக்கமான பராமரிப்புப் பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

யுஆர்ஏ செண்டரில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டிற்கான கட்டடக்கலை பாரம்பரிய விருது வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் சீ, சிங்கப்பூரின் கட்டடப் பாதுகாப்புத் துறையின் நீண்டகால வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில் புதிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

கட்டட மரபுடைமைச் சொத்துத் துறை குறித்த இந்த ஆலோசனை ஆய்வு, இத்துறையின் அளவு மற்றும் தன்மையை மதிப்பிடும். இதில் கட்டடப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள கட்டடக் கலைஞர்கள், பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், பிற நிபுணர்கள் உள்ளடங்குவர்.

“நமது பலங்கள் எவை, எங்கே திறன்கள், ஆற்றல் சார்ந்த இடைவெளிகள் உள்ளன. மேலும் பயிற்சி, மேம்பாட்டு நடவடிக்கைகளைத் தடுக்கும் காரணிகள் எவை என்பதைக் கண்டறிய விரும்புகிறோம்,” என்று அமைச்சர் சீ கூறினார்.

மேலும், நீண்டகால அடிப்படையில் இத்துறையின் திறன்களை எவ்வாறு வலுப்படுத்தலாம் என்பது குறித்த பரிந்துரைகளையும் இந்த ஆய்வு வழங்கும்.

“கட்டடப் பாதுகாப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யத் தேவையான அறிவையும் திறனையும் நம் மக்களுக்கு வழங்க, பயிற்சி, திறன் மேம்பாட்டிற்கு எவ்வாறு சிறந்த ஆதரவை அளிக்கலாம் என்பதை ஆராய்வது இதில் அடங்கும். அதேபோல், அரசு, தொழில்துறை, கல்வித்துறைக்கு இடையே வலுவான பங்காளித்துவத்தை உருவாக்குவதும் இதில் முக்கியமானது,” என்று அமைச்சர் விவரித்தார்.

நகர மறுசீரமைப்பு ஆணையத்தால் (யுஆர்ஏ) அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை நிறுவனமான ‘வெரியன் குரூப்’ மூலம் வழிநடத்தப்படவுள்ள இந்த ஆய்வு, நவம்பர் மாத மத்தியில் தொடங்கி 12 மாதங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, தொழில்துறை வல்லுநர்கள், தொழில்முறை அமைப்புகள், உயர்கல்வி நிலையங்கள், பொது அமைப்புகளை யுஆர்ஏ ஈடுபடுத்தும் என்று கூறிய திரு சீ, இதிலிருந்து பெறப்படும் பரிந்துரைகள் நடைமுறைக்கு ஏற்றதாகவும், தொழில்துறையின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஒட்டுமொத்த கட்டடப் பாதுகாப்பு முயற்சிகளைப் பொதுவான வழிகாட்டுதல்கள், வடிவமைப்பு உத்திகள் மூலம் யுஆர்ஏ வழிநடத்தினாலும், இவற்றைச் செயலில் கொண்டுவர சிங்கப்பூருக்குத் தனியார் துறையின் ஆதரவு தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
கட்டடக்கலைஆதரவுதனியார்