அடுத்த ஆண்டு தொடக்கத்திலிருந்து சொத்து முகவர்கள் தொடர்ந்து பணியாற்ற மூவாண்டுகளில் குறைந்தது மூன்று பரிவர்த்தனைகளை நிறைவேற்றவேண்டும் அல்லது திறன்களை நினைவூட்டிக்கொள்வதற்கான தேர்வில் (refresher examination) தேர்ச்சி பெறவேண்டும்.
மேலும், மாதந்தோறும் சொத்து முகவர்கள் சம்பாதிக்கும் தொகை தொடர்பான தரவுகளைச் சொத்து முகவர் மன்றம் சேகரிக்கத் தொடங்கும். ஒட்டுமொத்தத் துறைக்கான புள்ளிவிவரங்களையும் அது வெளியிடக்கூடும். சொத்து முகவராகப் பணியாற்றுவது குறித்து விருப்பப்படுவோர் முடிவெடுக்க உதவுவது நோக்கமாகும்.
இந்த மாற்றங்கள் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி நடப்புக்கு வரும்.
இவற்றால் சொத்து வாங்கும்போது வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் தெளிவும் சரியான தெரிவுகளும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த மாற்றங்கள், செயல்படாத சொத்து முகவர்களை அகற்றி இத்துறைக்குள் நுழைய விரும்புவோருக்கு நடைமுறையுடன் ஒத்துப்போகும் கண்ணோட்டத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.
வீவக மறுவிற்பனை வீட்டுப் பட்டியல் சேவை
நீண்டகாலத்தைப் பொறுத்தவரை, வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) மறுவிற்பனை வீட்டுப் பட்டியல் சேவையை (Resale Flat Listing Service) கழக மறுவிற்பனை வீட்டு விளம்பரங்கள் அனைத்துக்குமான முக்கியத் தளமாக விளங்கச் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசித்துவருகின்றனர்.
சொத்து உரிமையாளர்கள் வர்த்தகத் தளங்களில் நேரடியாக விளம்பரங்களைப் பதிவு செய்ய அனுமதிப்பது குறித்தும் அதிகாரிகள் ஆராய்ந்துவருகின்றனர். அதன் மூலம் வீட்டு உரிமையாளர்கள் சொத்து முகவர்கள் இல்லாமல் தாங்களே பரிவர்த்தனைகளை மேற்கொள்ளக் கூடுதல் வழிகள் அமையக்கூடும்.
இணையத்தில் சொத்து முகவர்களின் நடத்தை தொடர்பான தகவல்களை வாடிக்கையாளர்களும் விற்பனையாளர்களும் பார்த்துக்கொள்வதைச் சொத்து முகவர் மன்றம் எளிதாக்கியது. அதற்கு இரண்டு மாதங்கள் கழித்து மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. சொத்து முகவர்களுக்கு எதிரான புகார்களும் ஒழுங்கு நடவடிக்கைகளும் அதிகரித்தைத் தொடர்ந்து அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சொத்து முகவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து சொத்து முகவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30 விழுக்காடு அதிகரித்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் 28,397 முகவர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். இவ்வாண்டுத் தொடக்கத்தில் அந்த எண்ணிக்கை 36,816ஆகப் பதிவானது.
இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி நிலவரப்படி 2023க்குப் பிறகு 32,967 முகவர்கள் பணியில் இருந்தனர். அவர்களில் 12,920 பேர் 2023-2025 காலத்தில் குறைந்தது மூன்று குடியிருப்புச் சொத்துகளுக்கான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


