அடுத்த ஆண்டு தொடக்கத்திலிருந்து சொத்து முகவர்கள் தொடர்ந்து பணியாற்ற மூவாண்டுகளில் குறைந்தது மூன்று பரிவர்த்தனைகளை நிறைவேற்றவேண்டும் அல்லது திறன்களை நினைவூட்டிக்கொள்வதற்கான தேர்வில் (refresher examination) தேர்ச்சி பெறவேண்டும்.
மேலும், மாதந்தோறும் சொத்து முகவர்கள் சம்பாதிக்கும் தொகையைச் சொத்து முகவர் மன்றம் சேகரிக்கத் தொடங்கும். ஒட்டுமொத்தத் துறைக்கான புள்ளிவிவரங்களையும் அது வெளியிடக்கூடும். சொத்து முகவராகப் பணியாற்றுவது குறித்து விருப்பப்படுவோர் முடிவெடுக்க உதவுவது நோக்கமாகும்.
இந்த மாற்றங்கள் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி நடப்புக்கு வரும்.
இவற்றால் சொத்து வாங்கும்போது வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் தெளிவும் சரியான தெரிவுகளும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த மாற்றங்கள், செயல்பாட்டில் இல்லாத சொத்து முகவர்களை அகற்றி இத்துறைக்குள் நுழைய விரும்புவோருக்கு நடைமுறையுடன் ஒத்துப்போகும் கண்ணோட்டத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.


