அதிக ஆபத்துள்ள இயந்திரங்கள், எரியக்கூடிய துகள்கள் ஆகியவற்றைக் கையாளும் ஊழியர்களைப் பாதுகாக்க நடைமுறைப்படுத்தப்படும் விதிமுறைகளை 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
2021ஆம் ஆண்டில் துவாஸ் வட்டாரத்தில் ஏற்பட்ட வெடிப்பில் மூன்று ஊழியர்கள் மாண்டனர்.
இதையடுத்து, எரியக்கூடிய துகள்களுடன் தொடர்புடைய உற்பத்தியாளர்கள் மற்றும் அவற்றை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் பொட்டலங்களிலும் கொள்கலன்களிலும் முத்திரையிட வேண்டும் என்றும் அவற்றை எவ்வாறு பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என்பது குறித்தும் முத்திரையிட வேண்டும் என்று நவம்பர் 29ஆம் தேதியன்று மனிதவள அமைச்சு கூறியது.
அனுமதிக்கப்பட்ட அளவின் உச்ச வரம்பை அல்லது அதற்கும் அதிகமான எரியக்கூடிய துகள்களைக் கையாளும் நிலை ஏற்படும்போது அதுகுறித்து அமைச்சிடமும் நில உரிமையாளர்களிடமும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதிக ஆபத்துள்ள இயந்திரங்களுக்கான பட்டியலும் நவம்பர் 29ஆம் தேதியன்று விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கலவை இயந்திரங்கள், உலோகங்களை வெட்ட பயன்படுத்தும் இயந்திரங்கள், பொட்டலம் கட்ட பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் போன்றவை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
பயன்படுத்த பாதுகாப்பானவை என்று உறுதி செய்யப்பட்ட இயந்திரங்களை மட்டுமே உற்பத்தியாளர்களும் விநியோக நிறுவனங்களும் பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சு கூறியது.
இயந்திரங்களை பயன்படுத்துவதற்கான செய்முறை விளக்கங்களும் அவற்றில் இடம்பெற வேண்டும் என்று அமைச்சு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இயந்திரங்களைப் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படக்கூடாது என்பதை உறுதி செய்யும் பொறுப்பு அவற்றைப் பொருத்துபவர்களுக்கு மாற்றி வடிவமைப்பவர்களுக்கும் உள்ளது தெரிவிக்கப்பட்டது.
எரியக்கூடிய துகள்களும் ஆலைகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களும் ஊழியர்களுக்குப் பேரளவில் ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று மனிதவள மூத்த துணை அமைச்சரும் பல அமைப்பு வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரப் பணிக்குழுவின் தலைவருமான திரு ஸாக்கி முகம்மது தெரிவித்தார்.
“புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு நிறுவனங்கள் நடந்துகொள்கின்றனவா என்பதை உறுதி செய்ய சோதனைகள் நடத்தப்படும். புதிய விதிமுறைகளைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு அவற்றை நடைமுறைப்படுத்த வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வளங்களை நிறுவனங்கள் பயன்படுத்தலாம்,” என்று திரு ஸாக்கி கூறினார்.
வேலைநிறுத்த உத்தரவை மீறுபவர்களுக்கு $500,000 வரை அபராதமும் 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
அந்தக் குற்றத்தைத் தொடரும் பட்சத்தில் ஒவ்வொரு நாளுக்கும் கூடுதலாக $20,000 அபராதம் விதிக்கப்படும்.

