உடற்பிடிப்பு நிலையங்களுக்கான புதிய விதிமுறைகள்: சிங்கப்பூரில் வரவேற்பும் கவலைகளும்

உடற்பிடிப்பு நிலையங்களுக்கான புதிய விதிமுறைகள்: சிங்கப்பூரில் வரவேற்பும் கவலைகளும்

2 mins read
அதிகரித்த செலவுகள் குறித்து வணிகங்களுக்கிடையே கவலை
2f4ddad9-e5b0-4d36-9307-5067bce235d7
பிப்ரவரி 12ஆம் தேதி, பீப்பிள்ஸ் பார்க் சென்டரில் உள்ள உடற்பிடிப்பு நிலையத்தில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உடற்பிடிப்பு நிலையங்களுக்கான உரிம முறையைக் கடுமையாக்கும் நடவடிக்கை, குடியிருப்புப் பகுதிகளில் நடக்கும் பாலியல் குற்றங்கள் போன்ற பிரச்சினைகள் குறித்துக் கவலைப்படுபவர்களால் வரவேற்கப்பட்டுள்ளது. ஆனால், இதனால் தங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அத்தகைய வணிகங்கள் கவலை கொண்டுள்ளன.

“தங்கள் வீட்டு வாசலிலேயே இதுபோன்ற நடவடிக்கைகள் நடைபெறுவது குறித்து குடியிருப்பாளர்களிடையே அதிகரித்து வரும் அதிருப்திக்கு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு பதில் இந்த நடவடிக்கைகள்,” என்று ஜாலான் புசார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் ஃபுவா குறிப்பிட்டார்.

“இனி முறையான பதிவும் தணிக்கைகளும் நடைபெறுவது ஒரு நல்ல விஷயம். இருப்பினும் அதற்கு கணிசமான வளங்கள் தேவைப்படும்,” என்று திருவாட்டி ஃபுவா கூறினார். மேலும், குடியிருப்பாளர்களும் சமூகக் குழுக்களும் இதில் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2018 முதல் உரிமம் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்த திறந்தவெளி உடற்பிடிப்பு நிலையங்களுக்கு, இந்த ஆண்டின் பிற்பாதியிலிருந்து அந்த விலக்கு நீக்கப்படும் என்று காவல்துறை செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 21) அறிவித்தது.

உடற்பிடிப்பு நிலையங்கள் தற்போது இரண்டு உரிம வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வகை 1ல், வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) கடை வீடுகள், கடைத் தொகுதிகள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் செயல்படுபவை அடங்கும். அதே சமயம் வகை 2ல், குடியிருப்புப் பகுதிகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களிலிருந்து தொலைவில் அமைந்துள்ள நிலையங்கள் அடங்கும்.

தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஃபூ செஸியாங், சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக ஒரு நிலையம் மூடப்படும்போது, ​​மற்றொன்று உடனடியாக அதன் இடத்தைப் பிடித்துவிடுகிறது என்ற நீண்டகால அதிருப்திக்கு இந்த மாற்றங்கள் தீர்வு காண்கின்றன என்று கூறினார்.

பல திறந்தவெளி உடற்பிடிப்பு நிலையங்களைக் கொண்ட கிளமெண்டி தொகுதியை உள்ளடக்கிய ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் ஹோ, “இப்போது உடற்பிடிப்பு நிலையங்கள் செயல்பட விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன என்பதில் எனக்கு மகிழ்ச்சி,” என்று கூறினார்.

புதிய விதிமுறைகளால் தங்களின் வியாபாரம் பாதிக்கப்படுமோ என்று தாங்கள் கவலைப்படுவதாக திறந்தவெளி உடற்பிடிப்பு நிலையங்கள் சேனல் நியூஸ் ஏஷியாவிடம் தெரிவித்துள்ளன.

கிளமெண்டி அவென்யூ 2ல் உள்ள எடர்னல் ஹெல்த் சென்டரில் பணிபுரியும் ஓர் உடற்பிடிப்பு நிபுணர், தங்கள் கடை ஒரு உணவகத்திற்கு அருகில் இருப்பதால், அதன் அமைவிடம் ஏற்கெனவே சில வாடிக்கையாளர்களை எங்கள் நிலையத்துக்கு வரத் தயங்க வைக்கிறது என்று கூறினார்.

“சில நேரங்களில் வரிசை எங்கள் கடையின் முன்பகுதி வரை நீண்டுவிடும். வாடிக்கையாளர்கள் தங்கள் உணவுக்காகக் காத்திருக்கும்போது உள்ளே எட்டிப் பார்ப்பதால், சிலர் இங்கே உடற்பிடிப்பு செய்துகொள்ள விரும்பாமல் இருக்கலாம்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்