வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க சிங்கப்பூர் பங்குச் சந்தையில் புதிய விதிகள்

வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க சிங்கப்பூர் பங்குச் சந்தையில் புதிய விதிகள்

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

23 Sep 2026 - 9:34 pm

2 mins read

சிங்கப்பூரில் உள்ள பங்குதாரர்கள், புதிய விதிகள் நடப்புக்கு வரும்போது தாங்கள் முதலீடு செய்யும் நிறுவனங்களிடமிருந்து சிறந்த தகவல் தொடர்பையும் வெளிப்படைத்தன்மையையும் எதிர்பார்க்கலாம்.

முதலாவதாக, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் தனது இணையத்தளத்தில் பங்குதாரர்களுக்கான தொடர்புடைய தகவல்கள் மற்றும் தொடர்பு விவரங்களுடன் கூடிய தனிப்பட்ட இணையப்பக்கம் அல்லது பிரிவைக் கொண்டிருக்க வேண்டும்.

சிங்கப்பூர் பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் புதன்கிழமை (செப்டம்பர் 23) இதனைத் தெரிவித்தது.

அத்துடன், நிறுவனங்கள் தங்களின் ஆண்டறிக்கைகள், வருடாந்தர பொதுக் கூட்டங்களின் குறிப்புகள், முதலீட்டாளர் விளக்கக் காட்சிகள், வரவிருக்கும் நிகழ்வுகளின் நாள்காட்டி ஆகியவற்றையும் இணையத்தளத்தில் வெளியிட ஊக்குவிக்கப்படுகின்றன.

தற்போது, 90 விழுக்காட்டுக்கும் அதிகமான பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் முதலீட்டாளர் தொடர்புக்காக இணையத்தளத்தைப் பராமரித்து வந்தபோதிலும், ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே பங்குதாரர் தொடர்பு நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை வழங்குகின்றன.

முதலீட்டாளர் தொடர்புக் கொள்கை என்பது பங்குதாரர்களுடன் வழக்கமான, திறம்பட மற்றும் நியாயமான தொடர்பை ஏற்படுத்துவதற்கு உதவ வேண்டும்.

நிறுவனம் முதலீட்டாளர்களுடன் தொடர்புகொள்ளும் வழிகள் மற்றும் முதலீட்டாளர்கள் நிறுவனத்தைத் தொடர்புகொள்வதற்கான வழிமுறைகள் அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்களின் தலைமை நிர்வாக அதிகாரி உட்பட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஊதியத் தொகையைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் காரணிகளையும் தங்களின் ஆண்டறிக்கைகளில் தெளிவாக விளக்க வேண்டும் என்கிறது ஆணையம்.

2027 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிகள், குறிப்பிட்ட தகவல் தொடர்பு இடைவெளிகளைக் கையாள்வதையும் தகவல் தெரிவிக்கும் தரத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
பங்குச் சந்தைவிதிமுறைபங்குதாரர்