ஆசிய பசிபிக் வட்டாரத்திற்கான ஆகாய டாக்சி சேவைகளுக்கும் ஆளில்லா வானூர்திகளுக்குமான புதிய தொழில்துறை பாதுகாப்புத் தரநிலைகளைக் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 14) அவ்வட்டாரம் தழுவியுள்ளது.
வளரும் ஆற்றல் வாய்ந்த இந்தத் துறைக்கு அடித்தளமாக இந்தப் புதிய தரநிலைகள் அமைகின்றன.
ஆளில்லா வானூர்திகள், ஆகாய டாக்சிகள் போன்றவற்றின் வர்த்தகச் செயல்பாடுகளுக்கு அடித்தளம் அமைக்கும் விதமாக, ஆகாய டாக்சிக்குச் சான்றிதழ் அளிப்பு, பணியாளர்களுக்கான பயிற்சி ஆகியவற்றைத் தகவமைத்து வட்டார அளவில் இயங்கும் சேவை நடத்துநர்களால் பயன்படுத்தப்படலாம்.
வான்வழிப் பயணத்தின் புதிய வடிவமான ஆகாய டாக்சிகள், செங்குத்தாகத் தரையிலிருந்து புறப்பட்டு சிறு தூரங்களுக்குப் பயணிகளைக் கொண்டுசெல்லும்.
சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் கட்டுப்பாட்டு அமைப்புகளும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த விதிமுறைகள், இத்துறைக்காக முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளன.
ஜூலை 14ஆம் தேதி, மேம்பட்ட வான்வழிப் பயணங்களுக்குமான இரண்டாவது ஆசிய பசிபிக் சந்திப்பில் இந்த வழிமுறைகள் தொடங்கப்பட்டன. முதல் சந்திப்பு, 2023 நவம்பரில் நடைபெற்றது.
ஈவ் ஏர் மொபிலிட்டி, ஸ்கைபோர்ட்ஸ், எஸ்டி என்ஜினியரிங் உள்ளிட்ட 21 ஆகாய டாக்சிகள், வானூர்தி நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
தொழில்துறை வளர்ச்சியையும், பாதுகாப்பான தொழில்நுட்பத் தழுவுதலையும் இந்த வழிமுறைகள் ஆதரிக்கும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் பாதுகாப்புத் தரநிலைகள், புதிய தொழில்நுட்ப மேம்பாட்டின் வளர்ச்சியுடன் ஒத்துப்போக கட்டுப்பாட்டு ஆணையங்களுக்கு அது உதவும் என்றும் கூறப்படுகிறது.
பொதுமக்களுடனும் தனியார் அமைப்புகளுடனும் நடத்தப்பட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த வழிமுறைகள் வரைவு செய்யப்பட்டன. இதற்காக 48 பேரிடம் கிட்டத்தட்ட 600 கருத்துப்பதிவுகள் சேகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பாதுகாப்பு விதிமுறைகளும் தரநிலைகளும் ஐசிஏஓ எனப்படும் அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்பிடம் சமர்ப்பிக்கப்படும் என்று ஆணையம் குறிப்பிட்டது.

