தொடக்கநிலை 1 முதல் 3 வரை பயிலும் அனைத்துச் சிறுவர்களுக்கும் 2025 முதல் தனிப்பட்ட சுகாதாரத் திட்டம் ஒன்று கிடைக்கும். ஆரோக்கியமான தெரிவுகளை வாழ்க்கை முறையாக ஆக்கிக்கொள்ளவும் வயதாகும்போது நோய் நொடி வராமல் பார்த்துக்கொள்ளவும் அவர்களுக்கு உதவும் புதிய உத்தியின் ஓர் அங்கமாக இத்திட்டம் அமைகிறது.
சிங்கப்பூரில் பெரும்பாலான சிறுவர்கள் நல்ல ஆரோக்கியத்தில் இருந்தாலும், பலரும் தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளாகிவிட்டனர். நீண்ட நேரம் மின்னிலக்கச் சாதனங்களைப் பயன்படுத்துவது, தொலைக்காட்சி பார்ப்பது, ஆரோக்கியமற்ற உணவை உண்பது, குறைவாக உடற்பயற்சி செய்வது, குறைந்த நேரம் தூங்குவது உள்ளிட்டவை அவை.
இது, பின்னர் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஏற்கெனவே, குறிப்பாக இளைஞர்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.
எனவே, ஆரோக்கியமற்ற பழக்கங்களை முளையிலேயே கிள்ளி எறிய சுகாதார, கல்வி மற்றும் சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) தொடங்கப்பட்ட ‘குரோ வெல் எஸ்ஜி’ திட்டம், சிறுவர்கள் கைப்பேசிப் பயன்பாட்டைக் குறைக்கவும் சமச்சீரான உணவுகளை உண்ணவும் நடமாடவும் போதிய தூக்கம் பெறவும் குடும்பங்களுக்கு உதவுவதை இலக்காகக் கொண்டுள்ளது. பாலர் பள்ளிகள், பள்ளிகள், சுகாதாரக் கழகங்கள், சமூகம் ஆகியவை இந்த முயற்சிக்குக் கைகொடுக்கும்.
மேலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கிய அங்கமான குடும்ப உறவுகளிலும் நண்பர்களுடனான சமூகத் தொடர்புகளிலும் கவனம் செலுத்தப்படும்.
நன்றாக சாப்பிடுவது, நன்றாக தூங்குவது, நன்கு கற்பது, நன்றாக உடற்பயிற்சி செய்வது என்பதே குறிக்கோள்கள்.
செவ்வாய்க்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சுகாதார அமைச்சர் ஓங் யீ காங், ஒரு குழந்தை நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ள அதன் வாழ்வின் முதல் 1,000 நாள்கள் முக்கியமான காலகட்டம் என்று வலுவான ஆதாரம் உள்ளதாகக் கூறினார். அத்தகைய பழக்கங்கள் சிறுவர்கள் வளரும்போது அவர்களின் ஆரோக்கியத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இளம் வயதிலிருந்தே வாழ்க்கைமுறைப் பழக்கங்கள், சிறுவர்கள் வளரும்போது அவர்களின் நலனைப் பாதிப்பதைக் காட்டும் போதுமான ஆதாரங்களையும் அதிகாரிகள் ஆய்வுகளில் சேகரித்துள்ளதாக அமைச்சர் ஓங் சொன்னார்.
இந்தப் பழக்கங்கள் மூளையின் செயல்பாடு, அறிவாற்றல் வளர்ச்சி, நிர்வாகச் செயல்பாடு ஆகியவற்றைப் பாதிக்கின்றன. சிறுவர்கள் எவ்வாறு தகவல்களைக் கற்று, அவற்றை உள்வாங்கி, அவற்றைச் செயல்முறைப்படுத்துகிறார்கள் என்பதோடு அந்த நிர்வாகச் செயல்பாடு தொடர்புடையது என்று அமைச்சர் ஓங் விவரித்தார்.
‘குரோ வெல் எஸ்ஜி’ திட்டம், 12 வயது வரையிலான சிறுவர்களுடன் தொடங்கும். பின்னர் மற்ற வயதினருக்கும் அது நீட்டிக்கப்படும்.