பட்டதாரிகளுக்கு பெரிய நிறுவனங்களில் வாய்ப்புகளை வழங்கும் புதிய திட்டம்

பட்டதாரிகளுக்கு பெரிய நிறுவனங்களில் வாய்ப்புகளை வழங்கும் புதிய திட்டம்

2 mins read
aef0bc37-3e81-4242-af42-1e620bb056a5
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான் புதன்கிழமை (பிப்ரவரி 11) வேலைப் பயிற்சித் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் படிப்பை முடித்தோருக்குப் புதிய வேலைப் பயிற்சித் திட்டமொன்று கைகொடுக்கவிருக்கிறது.

விருந்தோம்பல், கணக்குத் தணிக்கை, சமூக ஈடுபாடு, எரிசக்தி போன்ற துறைகளில் 16 புதிய வகை வேலைகளில் சேர்ந்து பயிற்சி பெற அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும்.

‘ஏக்சஸ்’ சிங்கப்பூர் எனும் சமூக அறநிறுவனம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) புதிதாகத் தொடங்கியுள்ள 18 மாதப் பயிற்சித் திட்டம் அதற்கு வகைசெய்கிறது.

பட்டதாரிகள் பெரிய நிறுவனங்களில் வேலைப் பயிற்சியில் சேர்வதன் மூலம் அனுபவத்தைப் பெறலாம்.

அவர்களுக்கு மாதாந்தர ஊதியமாக $2,700 முதல் $3,800 வரை வழங்கப்படும். அத்துடன் முழு நேர ஊழியர்களைப் போன்றே மருத்துவ அனுகூலங்களையும் மிகை ஊதியங்களையும் அவர்கள் பெறுவர்.

பொதுவாகப் பட்டதாரிகள் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தால் என்னென்ன சலுகைகள் கிடைக்குமோ அவற்றுக்கு நிகராக இருக்கும்.

பங்கெடுப்போருக்கு முதலில் ஏக்சஸ் நிறுவனத்தின் வகுப்பறைகளில் முதல் இரண்டு வாரத்திற்குப் பயிற்சி அளிக்கப்படும். நிபுணத்துவத் திறன்களை மேம்படுத்திக்கொள்ள அவர்களுக்கு அது உதவியாக இருக்கும்.

பின்னர் அவர்கள் 18 மாதத்தின் எஞ்சிய காலத்திற்கு வேலைப் பயிற்சியைப் பெறலாம். அதன் பிறகு முழு நேர ஊழியராக அவர்களை எடுத்துக்கொள்ளலாமா என்பதை நிறுவனங்கள் மதிப்பிடும்.

திட்டம், பட்டதாரிகளுக்குப் பெரிய நிறுவனங்களில் படிப்படியான, முறையான பயிற்சியை வழங்கும். ரிட்ஸ்-கார்ல்டன், கெப்பல்லா போன்ற சொகுசு ஹோட்டல்களை நடத்தும் பொந்தியாக் லேண்ட் குழுமம், எண்ணெய், எரிவாயு நிறுவனமான பிபி (BP) சிங்கப்பூர், ஆலோசனை நிறுவனமான இஒய் (EY) சிங்கப்பூர் போன்றவை அவற்றுள் அடங்கும்.

திட்டம் முதலில் இவ்வாண்டு (2026) ஜூலை மாதம் வழங்கப்படும். இவ்வாண்டு பட்டயப் படிப்பை முடிப்போரும் கடந்த ஈராண்டில் பட்டதாரிகள் ஆனோரும் தற்போது அதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் செய்யும் காலம் சென்ற மாதம் (ஜனவரி) தொடங்கியது. வரும் மார்ச் மாதம் அது முடிவுக்கு வருகிறது. எல்லாத் துறைகளையும் சேர்த்து மொத்தம் 16 விதமான வேலைகள் உள்ளன.

இதுவரை ஏறக்குறைய 100 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

சிங்கப்பூரின் ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகளும் பட்டதாரி வேலைவாய்ப்புக் கருத்தாய்வைக் கடந்த மாதம் நடத்தியதைத் தொடர்ந்து அண்மைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பட்டயம் பெற்ற ஆறுமாதத்திற்குள் பட்டதாரிகளில் 54.2 விழுக்காட்டினர் முழு நேர வேலையில் சேர்ந்ததாகக் கருத்தாய்வு காட்டியது. அவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளம் $3,000.

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பேசினார்.

ஏராளமான இளம் சிங்கப்பூரர்களுக்குச் ‘சிங்கப்பூர்க் கனவு’ என்பது அர்த்தமுள்ள வேலையுடன் தொடங்குவதாக அவர் சொன்னார்.

புதிய பயிற்சித் திட்டத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுடன் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான்.
புதிய பயிற்சித் திட்டத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுடன் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
-
குறிப்புச் சொற்கள்