நேரடி மனநலச் சிகிச்சை, மனநல செயற்பாட்டு சிகிச்சை (psychotherapy) ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு ஆதரவளிக்கப் புதிய உபகாரச் சம்பளத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) மருத்துவப் பிரிவு வழங்கும் நேரடி மனநல சிகிச்சை, மனநல செயற்பாட்டு சிகிச்சை முதுநிலைப் பட்டக் கல்வியைப் (Master of Clinical Mental Health and Psychotherapy) பயிலும் மாணவர்களுக்கு இந்த உபகாரச் சம்பளம் வழங்கப்படுகிறது.
இந்த மாணவர்களில் அதிகபட்சமாக 24 பேருக்கு 2026ஆம் ஆண்டு முதல் மூவாண்டு காலத்துக்குப் புதிய உபகாரச் சம்பளம் வழங்கப்படும்.
இந்த உபகாரச் சம்பளத் திட்டத்தின்கீழ் மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதும் வழங்கப்படும்.
அதோடு, இந்தப் பாடத் திட்டம் தொடரும் 18 மாத காலத்துக்கு மாணவர்களுக்கு மாதந்தோறும் 3,000 வெள்ளி அத்தியாவசியத் தேவைக்கான படித்தொகையாகக (stipend) என்று என்யுஎஸ் புதன்கிழமை (நவம்பர் 26) தெரிவித்தது.
இலெய்ன் அண்ட் எடுவார்டோ செவரின் அறநிறுவனம் அன்பளிப்பாக வழங்கிய மூன்று மில்லியன் வெள்ளியைக் கொண்டு இந்த உபகாரச் சம்பளம் வழங்கப்படுகிறது. ஃபேஸ்புக் தளத்தை நிறுவியவர்களில் ஒருவரான எடுவார்டோ செவரின், அவரது மனைவி இலெய்ன் ஆகியோர் நிறுவிய அந்த அறநிறுவனம், அன்பளிப்புத் தொகையை என்யுஎஸ் மருத்துவப் பள்ளிக்கு வழங்கியது.

