தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதி செம்பவாங் ‘குடும்பத்தைச்’ சேர்ந்தது: அமைச்சர் ஓங்

2 mins read
c72ffadd-b21d-4943-949d-e3480276c2a3
செம்பவாங்கில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இ2ஐ நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் (இடமிருந்து இரண்டாவது). - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதி, தொடர்ந்து செம்பவாங் சமூகத்தின் அங்கமாக இருக்கும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.

செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ஓங், செம்பவாங் வெஸ்ட்டுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள், தொடர்ந்து செம்பவாங் குழுத்தொகுதி நகர மேம்பாட்டுத் திட்டத்தில் அங்கும் வகிக்கும் என்று புதன்கிழமை (மார்ச் 12) ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.

“தனித்தொகுதியாக இருப்பதால் அதன் குடியிருப்பாளர்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்திசெய்ய (செம்பவாங் வெஸ்ட்டுக்கு) மேலும் சுயமாக முடிவெடுக்கும் ஆற்றலும் கூடுதல் நீக்குப்போக்கும் இருக்கும்,” என்றார் திரு ஓங்.

தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு சமர்ப்பித்த அறிக்கையையும் பரிந்துரைகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக தேர்தல் துறை செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 11) தெரிவித்தது.

பாசிர் ரிஸ்-பொங்கோல், செம்பவாங், தெம்பனிஸ் குழுத்தொகுதிகளிலும் ஹோங் கா நார்த், பொத்தோங் பாசிர் தனித்தொகுதிகளிலும் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள்தொகை சார்ந்த மாற்றங்கள் இடம்பெற்றிருப்பது, சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் இடம்பெறும் புதிய வீடமைப்புத் திட்டங்கள் ஆகியவை வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பிற்குக் காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்தத் தொகுதிகள் ஒவ்வொன்றிலும் வாக்காளர் எண்ணிக்கை 10,000க்கும் மேலாகக் கூடியுள்ளதென அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த மாற்றம் ஆச்சரியப்படுவதற்கல்ல. கடந்த சில ஆண்டுகளில் கூடுதலான குடியிருப்பாளர்கள் செம்பவாங் குழுத்தொகுதிக்குக் குடிபுகுந்துள்ளனர், (இங்கு) மக்கள்தொகை கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது.

“இவ்வட்டாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஐந்திலிருந்து ஆறுக்கு அதிகரிப்பது, நமது குடியிருப்பாளர்களின் தேவைகளை மேலும் நன்கு பூர்த்திசெய்ய உதவும்,” என்று திரு ஓங் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்