புதிய $50 மில்லியன் ‘எஸ்ஜி’ பங்காளித்துவ நிதி

புதிய $50 மில்லியன் ‘எஸ்ஜி’ பங்காளித்துவ நிதி

2 mins read
a40b4eef-4f35-4e7e-b64d-7c7542d37ab1
மக்களின் அடிப்படை முயற்சிகளை (ground-up initiatives) மேலும் ஊக்குவிக்க புதிய $50 மில்லியன் ‘எஸ்ஜி பங்காளித்துவ நிதி’ (SG Partnerships Fund) தொடங்கப்படவுள்ளது - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மக்களின் அடிப்படை முயற்சிகளை (ground-up initiatives) மேலும் ஊக்குவிக்க புதிய $50 மில்லியன் ‘எஸ்ஜி பங்காளித்துவ நிதி’ (SG Partnerships Fund) தொடங்கப்படவுள்ளது.

இத்திட்டம் வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு நிலைகளிலான ஆதரவை வழங்கும். குறிப்பாக, பல ஆண்டுகள் நீடிக்கும் பெரிய திட்டங்களுக்கு 1 மில்லியன் வெள்ளி வரையிலான மானியம் வழங்கப்படும்.

முன்னதாக, இத்தகைய முயற்சிகளுக்கு ‘நமது சிங்கப்பூர் நிதி’ (Our Singapore Fund) மூலம் ஆதரவளிக்கப்பட்டு வந்தது.

2016ல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, சமூகக் கட்டமைப்பு, விளையாட்டுத் திட்டங்கள், வட்டார மேம்பாடுகள், மின்னிலக்க தயார்நிலைத் திட்டங்கள் என 800க்கும் மேற்பட்ட அடிப்படை முயற்சிகளுக்கு இந்நிதி ஆதரவளித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இதற்கு 250க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன.

அதிக மானியத் தொகை, நீண்ட கால நிதியுதவி, பரந்த தகுதி வரம்புகள் ஆகியவை மூலம் நிதியை எவ்வாறு வலுப்படுத்தலாம் என்பது குறித்து மக்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டதாக பிரதமர் வோங் வியாழக்கிழமை (பிப்ரவரி 12) வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

அந்தக் கருத்துகளின் அடிப்படையில் புதிய ‘எஸ்ஜி பங்காளித்துவ நிதி’ உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சிங்கப்பூரின் வலுவான ஒற்றுமை உணர்வைத் தொடர்ந்து வளர்க்க வேண்டும் என்றார் திரு வோங்.

“இத்தகைய உணர்வு, ஈகை, தொண்டு, கருணைச் செயல்களில் பிரதிபலிக்கிறது. இச்செயல்கள் தடைகளைத் தகர்த்து, மக்களை ஒன்றிணைத்து, சிங்கப்பூரர்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம் என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது,” என்றார் அவர்

இவை அனைத்தும் ‘நாம் முதல்’ (We First) எனும் சமூகத்திற்கு அடித்தளமாக அமைவதாக அவர் கூறினார்.

வரிக்கழிவுத் திட்டம் நீட்டிப்பு

அங்கீகாரம்பெற்ற பொதுநல அறக்கொடை அமைப்புகளுக்கும் (IPCs) மற்ற தகுதியுள்ள நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு, அரசாங்கம் தற்போது 250 விழுக்காடு வரிக்கழிவை வழங்கி வருகிறது.

இத்திட்டம் மேலும் மூன்றாண்டுகளுக்கு, அதாவது 2029ஆம் ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.

நிதிப் பங்களிப்புகளுக்கு அப்பால், தொண்டூழியத்தின் மூலம் தங்கள் நேரத்தையும் திறனையும் வழங்கும் பல சிங்கப்பூரர்களை அவர் அங்கீகரித்தார்.

சமூகப் பொறுப்புள்ள நடைமுறைகளை நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளில் ஒருங்கிணைக்க ஊக்குவிக்கும் வகையில் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சும் தேசிய சமூகச் சேவை மன்றமும் தொழில்முறை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இதற்கு ஆதரவளிக்கும் வகையில், ஊழியர்கள் தொண்டு புரிந்தாலோ அல்லது பொதுநல அமைப்புகளில் பணிபுரிய அனுப்பப்பட்டாலோ 250 விழுக்காடு வரிக்கழிவை வழங்கும் நிறுவனத் தொண்டூழியத் திட்டத்தை (Corporate Volunteer Scheme) அரசாங்கம் முன்னதாக அறிமுகப்படுத்தியிருந்தது.

இத்திட்டமும் 2029ஆம் ஆண்டு இறுதிவரை மேலும் மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் வோங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்