டாக்சிகளிலும் தனியார் வாடகை வாகனங்களிலும் பயணிகள் கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றும் பிரச்சினையைச் சமாளிக்க ஓர் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
அண்மைய ஆண்டுகளில் அத்தகைய சம்பவங்கள் அதிகரித்த போதிலும் 2024ஆம் ஆண்டில் விசாரணைக்காக அதிகாரிகளிடம் புகாரளிக்கப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது.
நிலப் போக்குவரத்து ஆணையமும் பொதுப் போக்குவரத்து மன்றமும் பிப்ரவரி மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த புள்ளிவிவரங்களின்படி, டாக்சிகள், தனியார் வாடகை கார்களில் கட்டண ஏய்ப்பு குறித்து 2024ல் 92 சம்பவங்கள் புகாரளிக்கப்பட்டன.
அது 2023ல் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்ட 198 சம்பவங்களில் கிட்டத்தட்ட பாதி அளவு. 2022ல் 170 சம்பவங்களும் 2021ல் 96 சம்பவங்களும் நிகழ்ந்தன.
2024ல் புகாரளிக்கப்பட்ட 92 சம்பவங்களில், பெரும்பாலானவை, கட்டண ஏய்ப்பு சம்பவங்களில் தொடர்புடைய ஐவர் சம்பந்தப்பட்டவை.
பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கப்பட்ட “பயணம் செய்யுங்கள், கட்டணத்தைச் செலுத்துங்கள்” (Ride Clean, Pay the Fare) இயக்கம் பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் இடையே நல்ல நடத்தையையும் பரஸ்பர மரியாதையையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது என நிலப் போக்குவரத்து ஆணையமும் பொதுப் போக்குவரத்து மன்றமும் தெரிவித்தன.
பயணிகள் தங்கள் கட்டணங்களை செலுத்த ஊக்குவிப்பதோடு, அவர்கள் பயணம் செய்யும் கார்களைச் சுத்தமாக வைத்திருக்கவும் அந்த இயக்கம் ஊக்குவிக்கிறது.
இயக்கத்தை விளம்பரப்படுத்தும் 3,400க்கும் மேற்பட்ட ஒட்டுவில்லைகள் (decals) இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன. கனிவான நடத்தையை ஊக்குவிக்கும் குறும் காணொளிகளும் இடம்பெறுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
உரிமம் பெற்ற டாக்சி, தனியார் வாடகை காரில் இடம்பெறும் கட்டண ஏய்ப்பு குறித்த விசாரணையில் நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் பொதுப் போக்குவரத்து மன்றம் செயல்படுகிறது.
பயணியிடமிருந்து கட்டணத்தை வசூலிக்க முடியாதபோது, மேல் விசாரணைக்காக ஓட்டுநர் வழக்கை ஆணையத்துக்கு அனுப்பலாம். காவல்துறையையும் அழைக்கலாம் அல்லது பயணியை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு ஓட்டிச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது. காவல்துறையில் புகார் பதிவு செய்த பின்னர் வழக்கை விசாரணைக்கு ஆணையத்துக்கு அனுப்பலாம்.
பயணி கட்டண ஏய்ப்பு புரிந்தது விசாரணையில் தெரியவந்தால் குற்றவாளிக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றம் புரிந்தால், ஓட்டுநருக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்துடன் முதல் குற்றத்திற்கு $200, இரண்டாவது குற்றத்திற்கு $400 இழப்பீட்டுத் தொகையையும் பயணி செலுத்த வேண்டும்.
இழப்பீடு, கட்டணத் தொகை செலுத்தாதவர்கள் மூன்று முறையும் அதற்கு மேற்பட்டும் கட்டண ஏய்ப்புக் குற்றம் புரிபவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
டாக்சி, தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சினை, பயணிகள் வாகனங்களை அசுத்தப்படுத்துவது.
கடந்த 2021 முதல் 2024 வரை, பயணிகளின் வாந்தி காரணமாக வாகனங்களைச் சுத்தம் செய்யும் செலவுகளுக்கு தனது ஓட்டுநர்கள் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 19 முதல் 38 செலவுகோரல்களை விண்ணப்பித்ததாக கம்ஃபர்ட்டெல்குரோ குறிப்பிட்டது.