இணையப் பாதுகாப்புத் துறையில் சேர விரும்புவோருக்கு, தொழில்துறை சார்ந்த பயிற்சிகள், தேவைப்படும் சான்றிதழ்கள் ஆகியவற்றின் தொடர்பில் இப்போது புதிய வழிகாட்டிகள் உள்ளன.
சிங்கப்பூர் கணினிச் சமூகம் அந்தத் துறைக்கான வாழ்க்கைத்தொழில் வழிகாட்டியை அமைத்துள்ளது.
கல்வி அமைச்சர் சான் சுன் சிங் ஜூலை 9ஆம் தேதி ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கருத்தரங்கு 2024’ல் இணையப் பாதுகாப்புக்கான புதிய திறன்வழிகாட்டியை அறிவித்தார்.
புதிய இணையப் பாதுகாப்பு வழிகாட்டியைத் தொடர்ந்து, ‘எஸ்டி எஞ்சினியரிங்’, தெமாசெக்’ உள்ளிட்ட 13 நிறுவனங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்துறைச் சான்றிதழ்களைப் பெற்ற தனிநபர்களுக்குப் பயில்நிலை வேலைப் பயிற்சி, வேலை நேர்காணல் வாய்ப்புகளை வழங்கும் என்றார் அவர்.
“இதன் மூலம், இணையப் பாதுகாப்புத் துறையில் சேரவிரும்பும் தனிநபர்கள் தங்களுக்குத் தேவைப்படும் திறன்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றின் தொடர்பில் தெளிவுபெறலாம்.
“பயில்நிலை வேலைப் பயிற்சிகள், வேலை நேர்காணல்கள் மூலம் அவர்கள் நிறுவனங்களிடம் தங்கள் ஆற்றலை வெளிக்கொணர வாய்ப்புகள் பெறலாம்,” என்று திரு சான் கூறினார்.
அதோடு, வர்த்தகத் தேவைகளைப் பூர்த்திசெய்ய, அதிகமான திறனாளிகளைப் பெறுவதற்கான வாய்ப்பு, பங்குபெறும் முதலாளிகளுக்கும் கிடைக்கும் என்று அவர் சொன்னார்.
பாய லேபாரில் உள்ள வாழ்நாள் கற்றல் நிலையத்தில் நடைபெற்ற ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கருத்தரங்கில் அவர் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
திறன்களை அங்கீகரிப்பதிலும் வாழ்க்கைத் தொழிலை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் அந்த ஒரு நாள் கருத்தரங்கிற்கு, ‘ஸ்கிஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’ ஏற்பாடு செய்தது.
‘பிஸ்னஸ் டைம்ஸ்’, ‘எஸ்பிஎச் மீடியா’ ஆகியவை அதற்கு ஆதரவு அளித்தன.

