சிங்கப்பூர்ச் சிறைத்துறை, சமூகத்திலிருந்தபடியே தண்டனையை நிறைவேற்றும் கைதிகள் கையில் அணியக்கூடிய புதிய அடையாளப் பட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.
‘ஜிபிஎஸ்’ எனப்படும் புவியிடங்காட்டி முறையில் செயல்படும் அது, திறன்கைக்கடிகாரத்தைப்போல் காட்சியளிக்கிறது.
கணுக்காலில் அணியும் அடையாளப் பட்டையால் ஏற்படக்கூடிய அவமதிப்பைக் குறைக்கும் முயற்சியாக அது கருதப்படுகிறது.
அரைக்காற் சட்டையோ கால்கள் தெரியும்படியான உடையையோ அணிவோரும் தேவையற்ற வகையில் பிறரின் கவனத்தை ஈர்க்காமல் சமூகத்தில் பழக விரும்புவோரும் இந்தப் புதிய அடையாளப் பட்டையைக் கையில் அணியலாம் என்று சிறைத்துறை கூறியது.
2022ஆம் ஆண்டு முதன்முதலாக இந்த அடையாளப் பட்டைகள் சோதிக்கப்பட்டதாக அது குறிப்பிட்டது.
சிறைக்கு வெளியே வேலை, கல்வி, சமூக நடவடிக்கைகளில் ஈடுபடும் கைதிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவர். அவர்கள் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
‘சூப்பர்வைசீ’ எனப்படும் கண்காணிக்கப்படும் கைதியின் தண்டனைக்காலம் முடிவடையும் காலகட்டத்தில் சமூகத்துடன் மீண்டும் அவர் ஒருங்கிணைவதை ஊக்குவிக்கும் வகையில் அத்தகைய கைதிகள் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதுண்டு.
இவ்வேளையில், கணுக்காலில் அணியும் அடையாளப் பட்டைகள் வழக்கொழிந்து போகமாட்டா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கைதிகளின் விவரங்கள், வாழ்க்கைமுறை, அவர்கள் ஈடுபடுத்தப்படும் சமூக நடவடிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு உகந்த அடையாளப் பட்டை அணிவிக்கப்படும். அத்தகைய கைதிகள் எதிர்கொள்ளும் அவமதிப்பைக் குறைப்பதன் மூலம் அவர்கள் நம்பிக்கை பெற்று, வேலை தேடவும் சமூகத்தில் கலந்துபழகவும் இயலும் என்று சிறைத்துறை சொன்னதாக ‘சிஎன்ஏ’ கூறியது.
வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களுக்குச் செல்கையில் அவர்கள் தாங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக உணர்கிறார்கள். யாரும் அவர்களை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை என்று சிறைத்துறை குறிப்பிட்டது.
கணுக்காலில் அடையாளப் பட்டை அணிவோரில் பலர் அதை மறைக்க முழுக்காற்சட்டை அணிவதை அது சுட்டியது.
தற்போது தன்முனைப்புப் பேச்சாளராகப் பணியாற்றும் முன்னாள் குற்றவாளி புரூஸ் மேத்யூ, இந்தப் புதிய, கையில் அணியும் அடையாளப் பட்டை, சமுதாயத்தில் மீண்டும் ஒன்றிணையத் தொடங்கும் வேளையில் அவமதிப்பு குறித்த மனநிலையைக் கடந்துவரக் கைதிகளுக்கு உதவும் என்றார்.
கணுக்காலில் அணியும் அடையாளப் பட்டைகள் பொதுமக்களின் கண்களுக்குத் தெரியும் விதத்தில் இருப்பதால் அது கைதிகளின் நம்பிக்கையைக் குலைக்கும் என்றார் அவர்.

