பிள்ளை துன்புறுத்தல் சம்பவங்களைக் கையாள புதிய சமூகச் சேவைகள் ஒருங்கிணைப்பு நிலையம்

2 mins read
bd6b872b-1c7d-4c1b-a7a6-b937e88abeb9
மேகன் கங் என்ற 4 வயது சிறுமி பிள்ளை துன்புறுத்தலால் உயிரிழந்தார். - படம்: இன்ஸ்டகிராம்/ சைமன்பாய்

பிள்ளை துன்புறுத்தல் சம்பவங்களை இன்னும் துரிதமாக அடையாளம் காணவும் அவற்றைக் கையாளவும் உதவ புதிய சமூக சேவைகள் ஒருங்கிணைப்பு நிலையம் அமைக்கப்படவிருக்கிறது.

எதிர்காலத்தில் துன்புறுத்தலால் உயிரிழக்கும் ஒவ்வொரு பிள்ளையின் வழக்கும் தனித்தனியாக ஆய்வு செய்யப்படும்.

மேகன் கங் என்ற 4 வயதுச் சிறுமியின் அண்மை மரணச் சம்பவத்தைத் தொடர்ந்து சமூக சேவைகள் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டெஸ்மண்ட் லீ புதிய நடைமுறைகள் குறித்து நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (நவம்பர் 5) அறிவித்தார்.

சமூக சேவைகள் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டெஸ்மண்ட் லீ புதிய நடைமுறைகள் குறித்து நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
சமூக சேவைகள் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டெஸ்மண்ட் லீ புதிய நடைமுறைகள் குறித்து நாடாளுமன்றத்தில் அறிவித்தார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

தொழில்நுட்பத்தின் ஆதரவில் செயல்படும் புதிய சமூக சேவைகள் ஒருங்கிணைப்பு நிலையம் சமூக சேவைகள், கல்வி, பாலர் பள்ளி, பிற பிரிவுகள் போன்ற வெவ்வேறு புள்ளிகளை ஒன்றிணைக்க உதவும் என்று திரு லீ சொன்னார்.

பிள்ளை துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்து, குறிப்பாக சிறுமி மேகன் வழக்கு குறித்து நாடாளுமன்றத்தில் 15 உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

மேகனின் வழக்கைக் கையாண்ட தன்னிச்சைக் குழு அக்டோபர் 23ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் வழக்குடன் தொடர்புடைய அமைப்புகள் விதிகளை மீறியதாகத் தெரியவந்தது.

மேகன் பயின்ற பாலர் பள்ளியிலிருந்து உதவிகோரி வந்த அழைப்புகளைப் பிள்ளைப் பாதுகாப்புச் சேவை அதிகாரி சரிவர பதிவுசெய்யாமல் போனது, விசாரணை நடைமுறைகளைப் பின்பற்றாமல் இருந்த காவல்துறை அதிகாரிகள் ஆகியவை அவற்றுள் அடங்கும்.

தாயாலும் அவரது காதலனாலும் ஓராண்டுக்கும் மேல் துன்புறுத்தப்பட்ட மேகன் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயிரிழந்தார்.

பிள்ளைப் பாதுகாப்புச் சேவை துன்புறுத்தும் குடும்பத்திடமிருந்து எப்போது ஒரு பிள்ளையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும், உயிரிழக்கும் வரை துன்புறுத்தப்படும் பிள்ளைகளின் வழக்கை விசாரிக்க சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தனி ஆய்வுக் குழுவை அமைக்குமா என்பன போன்ற கேள்விகளும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.

அவற்றுக்குப் பதிலளித்த திரு லீ, துன்புறுத்தப்பட்டு உயிரிழக்கும் பிள்ளைகளின் வழக்கு அனைத்தும் இனி தன்னிச்சையாக விசாரிக்கப்படும் என்றார்.

இதற்குமுன் சம்பந்தப்பட்ட சமூக சேவை அமைப்புடன் இணைந்தே அத்தகைய வழக்குகளைச் சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சு விசாரித்தது.

மேலும் தனியார் குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் அமைச்சு முழுமையாக ஏற்றுக்கொள்வதாகத் திரு லீ குறிப்பிட்டார்.

அத்தகைய பரிந்துரைகளை அடுத்த ஆண்டு இறுதிக்குள் கட்டங்கட்டமாக அமைச்சு நடைமுறைப்படுத்தும் என்றும் அவர் உறுதியளித்தார்.

“மேகனின் மரணத்தைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் இருந்தன. நாம் அதைத் தவறவிட்டுவிட்டோம் என்பது தெளிவாகப் புலப்படுகிறது,” என்றார் திரு லீ.

குறிப்புச் சொற்கள்