செல்லப் பிராணிகளின் தொற்றுநோய்களுக்கு நுண்ணுயிர்க்கொல்லி (ஆன்டிபயாடிக்) மருந்துகளுக்குப் பதிலாக, புதிய நுண்ணுயிர் எதிர்ப்புப் புரதக்கூறுகளைச் (பெப்டைட்) சிங்கப்பூர் நிறுவனமான ‘ஹீல்பேக்’ உருவாக்கியுள்ளது.
நுண்ணுயிர்க்கொல்லிகள் கிருமிகளுக்கு மருந்து எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதோடு அதற்கான தயாரிப்புச் செலவு அதிகமாக இருப்பதாகவும் அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் அவினந்தா பானர்ஜி தெரிவித்தார்.
‘ஏ ஸ்டார்’ ஆய்வு நிறுவனத்திலிருந்து பிரிந்து கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட அந்நிறுவனம், மூல உயிரணுக்களிலிருந்து பெறப்பட்ட, இயற்கையால் ஈர்க்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்புப் புரதக்கூறுகளைத் தயாரித்துள்ளது.
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள வேதிப்பொருள்களுக்குப் பாதுகாப்பான மாற்றாகவே அவை முதலில் வடிவமைக்கப்பட்டன.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுத் திட்டத்தின்கீழ், $200,000 வரையிலான நிதியுதவியுடன் அத்திட்டம் வளர்ச்சியடைந்தது.
அக்டோபரில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, சிலிக்கான் வேலி ஆகிய பகுதிகளுக்குச் சென்று முதலீட்டாளர்களையும் அக்குழு சந்தித்தது.
“உலகில் ஏறக்குறைய 73% நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் பண்ணை விலங்குகளுக்கே பயன்படுத்தப்படுகின்றன. நுண்ணுயிரிகளால் ஏற்படும் பிரச்சினைகளைத் தடுப்பதற்காகத் தேவையின்றி நுண்ணுயிர்க்கொல்லிகளைப் பயன்படுத்துவதும் நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கக் காரணமாக உள்ளது,” எனத் திருவாட்டி அவினந்தா கூறினார்.
இது தொடர்ந்தால், அடுத்த 30 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான உயிர்களும் உணவுப் பாதுகாப்பும் பாதிக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
மனித உயிரணுக்களைக்கொண்டு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் புரதக்கூறுகள், நுண்ணுயிர்களின் உயிரணுச் சுவர்களைத் தாக்கி அழிக்கின்றன. இதன் மூலம் அவை மருந்துகளுக்கு எதிராகப் பரிணாம வளர்ச்சி அடைவது தடுக்கப்படுகிறது.
தற்போது கால்நடை மருத்துவத்தில் அதைப் பயன்படுத்த ‘ஹீல்பேக்’ கவனம் செலுத்துகிறது.
பிரெஞ்சு புல்டாக் வகை நாயின் தோல் தொற்று, புரதக்கூறுகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட களிம்பால் மூன்று நாள்களில் குணமானது.
இதனை வணிகரீதியாகச் சந்தைப்படுத்துவதற்கு முன்பு, அதன் செயல்திறனை உறுதிப்படுத்த சிங்கப்பூரின் ஆறு கால்நடை மருந்தகங்களுடன் இணைந்து மருத்துவத் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
