சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் சிறிய, மெலிந்த உடல்வாகுடனான பல்லியைச் சிலர் கண்டிருக்கலாம்.
அவற்றின் தொண்டைப் பகுதிக்குக் கீழ் உள்ள பாகம் மஞ்சள் அல்லது சிவப்பு கலந்த ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். உன்னிப்பாகக் கவனித்துப் பார்த்தால் இதை அறிய முடியும்.
‘பிரவுன் அனோல்’ (Brown Anole) என்றழைக்கப்படும் இப்பல்லியை நிலத்திலும் மரங்களிலும் காணலாம். சிங்கப்பூர் முழுவதும் இதை இப்போதெல்லாம் அதிகமாகப் பார்க்க முடிகிறது.
ஆனால், இவ்வகைப் பல்லிகள் இப்பகுதியில் இருக்கவேண்டியவை அல்ல. அவை பஹாமஸ், கியூபா, சுவான் தீவுகளுக்குச் சொந்தமானது.
சிங்கப்பூரில் ‘புதிதாகக் குடிபுகுந்துள்ள’ இரண்டு புதியவகை விலங்குகளில் ‘பிரவுன் அனோல்’ பல்லி ஒன்று. மற்றொன்று, ‘கிரீன்ஹவுஸ் ஃபிரோக்’ தவளை. இந்தத் தவளையும் இப்போது சிங்கப்பூரில் அதிகமாகக் காணப்படுகிறது.
‘கிரீன்ஹவுஸ் ஃபிரோக்’ தவளை, பஹாமஸ், கியூபா, கேமன் தீவுகளுக்குச் சொந்தமானவை.
கடந்த மார்ச் மாதம், செம்பாவாங்கில் உள்ள ஒரு வீட்டின் மாடிமுகப்பில் பகுதியில் இரண்டு ‘பிரவுன் அனோல்’ பல்லிகள் காணப்பட்டன. 12லிருந்து 30 மில்லிமீட்டர் நீளம் வரை இருக்கும் ‘கிரீன்ஹவுஸ் ஃபிரோக்’ தவளை, சிங்கப்பூரில் முதன்முதலில் 2015ஆம் ஆண்டு செம்பாவாங்கில் காணப்பட்டது.
இயற்கையாக சிங்கப்பூரில் காணப்படாத இதுபோன்ற விலங்குகள் ‘அறிமுகப்படுத்தப்பட்ட விலங்கு வகைகள்’ என்றழைக்கப்படுகின்றன. இங்கிருப்பது உள்ளூர் சுற்றுச்சூழலுக்கு அபாயம் விளைவித்தால் இவை இடையூறு விளைவிப்பதாகப் பார்க்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
இனப்பெருக்க விகிதம் அதிகமாக இருப்பது, மாறுபட்ட இயற்கைச் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை வெற்றிகரமாக மாற்றிக்கொள்வது போன்ற அம்சங்களால் உள்ளூர் இயற்கைச் சூழலுக்கு இடையூறு ஏற்படக்கூடும்.
‘பிரவுன் அனோல்’ பல்லி, ‘கிரீன்ஹவுஸ் ஃபிரோக்’ தவளை ஆகியவை சிங்கப்பூரில் இருப்பதைத் தாங்கள் அறிவதாக தேசிய பூங்காக் கழகம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது. இதன் தொடர்பில் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் கழகம் குறிப்பிட்டது.
இந்த இருவகை விலங்குகளும் வெளிநாடுகளில் உள்ளூர் இயற்கைச் சூழலுக்கு இடையூறாக இருந்ததாக தேசிய பூங்காக் கழகப் பல்லுயிர்ச்சூழல் நிலையத்தின் குழும இயக்குநர் கேரீன் டுன் தெரிவித்துள்ளார். எனினும், சிங்கப்பூரின் இயற்கைச் சூழலுக்கு இவற்றால் பாதிப்பு இருப்பதாக இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என்றும் டாக்டர் டுன் சுட்டினார்.