சிங்கப்பூரின் வடமேற்குப் பகுதியில் வீட்டுக்கு அருகே வேலை செய்ய விரும்புவோருக்குக் கைகொடுக்கவிருக்கிறது புதிய இணையவாசல் ஒன்று.
‘ஜாப்ஸ் எனிவேர் @ நார்த் வெஸ்ட் (Jobs Anywhere @ North West) என்பது புதிய இணையவாசலின் பெயர்.
வடமேற்கு வட்டாரத்தில் உள்ள புதிய வேலைவாய்ப்புகளை அது ஒருங்கிணைக்கிறது.
ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி, மார்சிலிங்-யூ டீ குழுத்தொகுதி, நீ சூன் குழுத்தொகுதி, செம்பவாங் குழுத்தொகுதி, புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி ஆகியவற்றை உள்ளடக்கியது வடமேற்கு வட்டாரம்.
உட்லண்ட்சின் காஸ்வே பாய்ன்ட் கடைத்தொகுதியில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) நடைபெற்ற ஸ்கில்ஸ்ஃப்யூச்சர் விழாவில் புதிய இணைய வாசல் அறிமுகம் கண்டது. விழா ஞாயிற்றுக்கிழமையும் தொடரும்.
என்டியூசியின் வேலைநியமன, வேலைத்தகுதிக் கழகமும் ‘ஃபைண்ட்எஸ்ஜிஜாப்ஸ்’ (FindSGJobs) இணையத்தளமும் புதிய இணையவாசலை நிர்வகிக்கின்றன.
தற்போது அதில் கிட்டத்தட்ட 10,000 வேலைவாய்ப்புகள் இடம்பெற்றுள்ளன. குடியிருப்புப் பேட்டைகளில் இருக்கும் கடைகளில் வேலை பார்க்கப் பல வாய்ப்புகள் இருக்கின்றன. உணவுக்கடைகள், சிகை அலங்காரக் கடைகள் போன்றவை அவற்றுள் சில.
வடமேற்கு வட்டார மேயர் அலெக்ஸ் யாம், கடந்த சில ஆண்டுகளில் குடியிருப்பாளர்களிடமிருந்து திரட்டப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இணையவாசல் உருவாக்கப்பட்டதாகச் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
நீக்குப்போக்கான, பகுதிநேர வேலைகளைக் கண்டுபிடிப்பதில் சிரமங்களை எதிர்நோக்குவோருக்கு இணையவாசல் உதவியாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
புதிய இணையவாசலில் முழுநேர வேலைவாய்ப்புகளும் நீக்குப்போக்கான, குறுகியகால அல்லது தற்காலிக வேலைவாய்ப்புகளும் இடம்பெற்றுள்ளன.

