தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுகாதாரப் பராமரிப்புத் துணை நிபுணர்களுக்கான புதிய உத்தி

2 mins read
2025ஆம் ஆண்டு விவரங்கள் வெளியிடப்படும்
b402c31b-8078-4700-9f39-8581edb7f199
சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடந்த அனைத்துலகக் கருத்தரங்கில் உரையாற்றிய அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி. - படம்: எஸ்பிஎச் மீடியா

சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் சுகாதாரப் பராமரிப்புத் துணை நிபுணர்கள் (allied health professionals) ஆற்றக்கூடிய பங்கைச் சிறப்பாக வடிவமைக்கும் நோக்கில் தேசிய அளவிலான உத்தி வகுக்கப்பட்டு வருகிறது.

அந்த உத்தி குறித்த விவரங்கள் 2025ஆம் ஆண்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் சுகாதார இரண்டாம் அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி, வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 1) நடந்த சுகாதாரப் பராமரிப்புத் துணை நிபுணர்களுக்கான கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றியபோது இதனை அறிவித்தார்.

சுகாதாரப் பராமரிப்புத் துறை வளர்ந்துவரும் நிலையில், சுகாதாரப் பராமரிப்புத் துணை நிபுணத்துவத் தொழிலை முன்னெடுத்துச் செல்லும் வகையில் தெளிவான உத்தியும், வலுவான தலைமைத்துவமும், புத்தாக்க உணர்வும் தேவைப்படுகின்றன என்று அமைச்சர் மசகோஸ் குறிப்பிட்டார்.

மருத்துவர்கள், தாதியர்களுடன் இணைந்து, நோயாளிகளுக்கு முழுமையான பராமரிப்பு வழங்குவதில் சுகாதாரப் பராமரிப்புத் துணை நிபுணர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர்.

இந்நிலையில், ‘ஹெல்தியர் எஸ்ஜி’, ‘ஏஜ் வெல் எஸ்ஜி’ போன்ற தேசிய அளவிலான திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்த ஏதுவாக, சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பில் தங்களது பங்கை ஆற்ற உதவும் வகையில் வகுக்கப்படும் தேசிய உத்தியில் சுகாதாரப் பராமரிப்புத் துணை நிபுணர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் திரு மசகோஸ் கூறினார்.

எதிர்காலச் சவால்களைக் கையாளுதல், மக்கள்தொகை வளர்ச்சி போன்ற விவகாரங்களில் அந்த உத்தி சுகாதாரப் பராமரிப்புத் துணை நிபுணர்களுக்குக் கைகொடுக்கும் என்ற அவர், அதுகுறித்த விவரங்கள் அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

சுகாதாரப் பராமரிப்புத் துணை நிபுணத்துவத் துறையை துணிவுடன் முன்னெடுத்துச் செல்ல வலுவான தலைவர்களும் தேவை என்றும் திரு மசகோஸ் சொன்னார்.

சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடந்த அந்த அனைத்துலகக் கருத்தரங்கில் 18 நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள், மாணவர்கள் என ஏறக்குறைய 1,100 பேர் கலந்துகொண்டனர்.

சிங்ஹெல்த் மற்றும் தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்துடன் இணைந்து சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை அந்தக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்சுகாதாரம்நிபுணர்மருத்துவம்