தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் உணவு ஒவ்வாமை குறித்த ஆகப்பெரிய ஆய்வு

3 mins read
முதற்கட்ட ஆய்வு முடிந்து இரண்டாம் கட்ட ஆய்வுகள் தொடங்கவுள்ளன
e33c8420-258f-4823-a001-0e176e2c95fc
ஆய்வு மேற்கொள்ளும் மருத்துவர் குழுவுடன் அதில் பங்கேற்கும் சிறார்கள். (மேல்வரிசை இடமிருந்து) பேராசிரியர் எலிசெபெத் தாம், மருத்துவர் அபிராமி ஆனந்தன், (கீழ்வரிசை இடமிருந்து) சார்புநிலைத் துணைப் பேராசிரியர் சோங் கோக் வீ, கூ டெக் புவாட் மருத்துவமனை - என்யுஎஸ் குழந்தைகள் மருத்துவ மையத் தலைவர் பேராசிரியர் லீ யுங் செங். - படம்: லாவண்யா வீரராகவன்

சிங்கப்பூரில் உணவு ஒவ்வாமையின் தாக்கம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

நான்காண்டுகளுக்கு நடைபெறவுள்ள இந்த ஆய்வானது குழந்தைகளின் ஊட்டச்சத்து, வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் ஆகியவற்றில் ஒவ்வாமையின் தாக்கத்தைக் கண்டறியும்.

உணவு ஒவ்வாமை குறித்த மேம்பட்ட தகவல்களுடன் அது சமூக, பொருளியல் தாக்கம் குறித்த தகவல்களையும் வழங்கும்.

தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை, யூன் லூ லிங் மருத்துவக் கழகம், கேகே மகளிர் சிறார் மருத்துவமனை, தேசியப் பல்கலைக்கழகப் பலதுறை மருந்தகம், என்யுஎஸ் சா சுவீ ஹாக் பொதுச் சுகாதாரக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர் குழு இணைந்து நடத்தும் இந்த ஆய்வு இரு கட்டங்களாக நடைபெறும். இது சிங்கப்பூரில் நடைபெறும் ஆகப் பெரிய உணவு ஒவ்வாமை குறித்த ஆய்வாக அமையும்.

“ஒரு குறிப்பிட்ட உணவை உட்கொண்டாலோ, அது அருகில் இருந்தாலோ உடலில் தடிப்பு, வீக்கம், மூச்சுத் திணறல் ஏற்படுவது உணவு ஒவ்வாமை எனப்படும். வழக்கமாக, பால், வேர்க்கடலை உள்ளிட்ட விதைகள், முட்டை, சில வகை மீன்களால் ஒவ்வாமை ஏற்படலாம். சில நேரங்களில் அது உயிருக்கே ஆபத்தாகவும் அமையலாம். பொதுவாக, ஆசிய நாடுகளில் இவ்வகை ஒவ்வாமைகள் இருப்பதில்லை எனும் நம்பிக்கை நிலவியது,” என்றார் ஆய்வுக் குழுவின் தலைமை முதன்மை ஆய்வாளர் பேராசிரியர் எலிசெபெத் தாம்.

“சிங்கப்பூரில் உணவு ஒவ்வாமை பாதிப்பு குறித்த தரவுகள் இல்லை. ஆனால், குழந்தைகளிடையே உணவு ஒவ்வாமை கடந்த 5 முதல் 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதை மருத்துவமனைக்கு வருகையளிக்கும் எண்ணிக்கையை வைத்து அறிய முடிகிறது,” என்றும் அவர் சொன்னார்.

இதுகுறித்த அண்மைய தரவுகளைக் கணிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஒவ்வாமை கொண்டோர்க்கான ஆதரவுக் கட்டமைப்புகளை உருவாக்கவும் இந்த ஆய்வு உதவுமெனப் பேராசிரியர் தாம் குறிப்பிட்டார்.

பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த ஆய்வில் முதற்கட்டத்தில் குறைந்தது 2,000 பெற்றோர்கள் பங்கேற்றனர். இதில், ஒவ்வாமை தொடர்பாகக் குழந்தைகளுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிய கேள்விகளுக்குப் பெற்றோர் விடையளித்தனர். அதனைத் தொடர்ந்து அக்குழந்தைகள் கூடுதல் மதிப்பீடுகள், சிகிச்சைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டனர்.

ஜூலை மாதம் தொடங்கவுள்ள இரண்டாம் கட்டத்தில், பால், முட்டை, வேர்க்கடலை, சிப்பிமீன் போன்றவற்றால் ஒவ்வாமைக்கு ஆளாகும் 18 வயதிற்குட்பட்ட 400 பேர் பங்கேற்கின்றனர்.

“அவர்களிடம் கூடுதல் ஆய்வு நடத்தப்பட்டு எதிர்காலப் பரிந்துரைகள் முன்வைக்கப்படும்,” என்றார் ஆய்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள தேசியப் பல்கலைக்கழகப் பலதுறை மருந்தகத்தின் குழந்தைகள் நல மருத்துவர் அபிராமி ஆனந்தன்.

இனவாரியாக இந்த எண்ணிக்கைகள் எவ்வாறு உள்ளன எனும் தகவல்கள், உணவகங்கள், பிற சார்பு நிறுவனங்களுக்கான பரிந்துரைகள், இவ்வகை ஒவ்வாமை கொண்டோர்க்கான மனநல ஆதரவு உள்ளிட்ட பிற விரிவான தகவல்களையும் ஆய்வு முடிவு உள்ளடக்கும் என்று ஆய்வுக்குழுவினர் கூறினர்.

குழந்தைகளுக்கு ஒவ்வாமைக்கு எதிரான பாதுகாப்பான சூழலை அமைத்துக் கொடுத்து, பள்ளியிலும் பணியிலும் அவர்கள் சிறப்பாகச் செயல்பட ஆதரவளிப்பதும், பெற்றோரின் அச்சத்தைப் போக்கி நிம்மதியளிப்பதும் இத்திட்டத்தின் இலக்கு என்று பேராசிரியர் தாம் விளக்கினார்.

குழந்தைகளுக்குச் சில உணவுகளைக் கொடுக்கும்போது உடல் தடித்துச் சிவந்துபோதல், ஆங்காங்கு வீங்கிப்போதல், மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். சில ஒவ்வாமைகளை முற்றிலும் சரிசெய்ய முடியாது என்றாலும், பெரும்பாலானவற்றைப் படிப்படியாக மருத்துவர் குழுவின் மேற்பார்வையில் குறைத்துவிட முடியும். அதைச்செய்வது தான் ‘ஃபுட் சேலஞ்ச்’ எனும் திட்டத்தின் இலக்கு,” என்றார் மருத்துவர் அபிராமி.

இத்திட்டத்தின்கீழ் ஒவ்வாமைக்கேற்ற வகையில், ஓர் உணவைக் குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்தும் சிகிச்சை அளிக்கப்படுவதாக அவர் சொன்னார்.

‘ஒவ்வாமை இல்லாத’ பொருள்களின் விலைகளும் அதிகம் என்ற அவர், அது பெற்றோர்க்குத் தரும் பொருளியல், மனநலச் சுமைகுறித்தும் பேசினார்.

“ஒவ்வாமையால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகும் குழந்தைகளுக்குப் பிள்ளைப் பராமரிப்பு நிலையங்களில் இடம் கிடைப்பது சிரமமாக உள்ளது. சில பிள்ளைகளுக்கு அப்பொருளை உட்கொள்ளாமல் அதனருகில் சென்றாலே ஒவ்வாமை ஏற்படும். அதற்காகப் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்துவது, உரிய பொருள்களைத் தேர்ந்தெடுப்பது எனப் பல்வேறு நடைமுறைச் சிக்கல் நிலவுகின்றன,” என்று இதில் பங்கேற்கவுள்ள பெற்றோர் தெரிவித்தனர்.

இவற்றைக் குறித்து பகிர்ந்துகொள்ளவும் ஆதரவு திரட்டவும் ‘ஸ்பீக்’ எனும் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னார் ஆய்வில் பங்கேற்கும் தாய்மார்களில் ஒருவரான திருவாட்டி விங் இன்.

உணவு ஒவ்வாமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உரிய அரசு நிறுவனங்களுடன் இணைந்து எதிர்காலத்தில் செயலாற்றும் வாய்ப்புள்ளதாக ஆய்வுக் குழு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்