வாழ்க்கைத்தொழில் வெற்றிக்கு பட்டக் கல்வி முக்கியம்: நால்வரில் மூவர் கருத்து

வாழ்க்கைத்தொழில் வெற்றிக்கு பட்டக் கல்வி முக்கியம்: நால்வரில் மூவர் கருத்து

2 mins read
8b7e74f2-0cbb-4d92-8cc1-9053a0352bb6
சிங்கப்பூரில் நல்ல வேலைகள் கிடைக்க வலுவான சமூகத் தொடர்புகள் அவசியம் என்று பத்துப் பேரில் ஒன்பது பேர் நம்புவதாக ஆய்வு முடிவுகள் கூறின.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரைப் பொறுத்தமட்டில், வாழ்க்கைத்தொழிலில் வெற்றிபெற பட்டக் கல்வி முக்கியம் என்று கிட்டத்தட்ட நால்வரில் மூவர் கருதுகின்றனர்.

இருப்பினும், கடுமையாக உழைப்பதன்மூலம் தங்களது சமூக, பொருளியல் நிலையை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்று 85 விழுக்காட்டினர் நினைக்கின்றனர்.

அதே நேரத்தில், கடந்த பத்தாண்டுகளில் சிங்கப்பூர் ஏற்றத்தாழ்வுமிக்க சமூகத்தைக் கொண்ட நாடாகிவிட்டது என்பது இருவரில் ஒருவரின் கருத்தாக உள்ளது.

‘ஆக்சஸ் சிங்கப்பூர்’ எனும் இலாப நோக்கமற்ற நிறுவனம் நடத்திய ஆய்வின்மூலம் இவை தெரியவந்துள்ளன.

16 வயதும் அதற்குமேலும் வயதுடைய பல்வேறு வயதுப் பிரிவினர் அடங்கிய 1,000 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

‘மில்யூ இன்சைட்’ எனும் சந்தை ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து, 2022 ஜூன் முதல் 2023 ஜூலை வரை இரண்டாவது முறையாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. முதல் ஆய்வு 2021ஆம் ஆண்டில் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் 2022ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன.

பெயர்பெற்ற உயர்நிலைப் பள்ளியில் படிப்பது ஒருவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் கூறினர். தன்னாட்சிப் பள்ளிகள் அல்லது தாய்மொழியில் நற்தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கென சிறப்பு உதவித் திட்டங்களை வழங்கும் பள்ளிகள் போன்றவற்றை அவை குறிக்கின்றன.

வாய்ப்பு கிடைத்தால் பெயர்பெற்ற பள்ளிகள் இருக்கும் வட்டாரத்திற்கு இடம்பெயரத் தயாராக உள்ளதாக 60 விழுக்காட்டினருக்கும் மேற்பட்டோர் தெரிவித்தனர்.

சமூகத் தகுதிநிலையைப் பொறுத்தமட்டில், சமூகத் தொடர்புகளும் வீடமைப்புப் பேட்டைகளும் முக்கிய இடம்பெற்றிருப்பதாகக் கருதுவதை ஆய்வு சுட்டிக்காட்டியது.

சிங்கப்பூரில் நல்ல வேலைகள் கிடைக்க வலுவான சமூகத் தொடர்புகள் அவசியம் என்று பத்துப் பேரில் ஒன்பது பேர் நம்புகின்றனர்.

“வெற்றிக்கு கடின உழைப்பு தேவை என்பதை உணர்ந்துள்ளபோதும் சமூகத் தொடர்புகளும் அதற்கு முக்கியம் என மக்கள் நினைப்பதாகக் கருதுகிறேன்,” என்று ‘ஆக்சஸ் சிங்கப்பூர்’ அமைப்பின் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான கிளாரென்ஸ் சிங் கூறினார்.

ஆரம்பக்கல்வியை ஊக்குவிக்கும் ‘கிட்ஸ்டார்ட்’ போன்ற அரசாங்கத் திட்டங்கள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆயினும், அதற்குப் பிந்திய ஆண்டுகளில் மாணவர்களுக்குச் சமமான வாய்ப்புகளை வழங்க இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்றும் திரு சிங் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்வேலைவாய்ப்புவாழ்க்கைத்தொழில்