சமூகப் பணிகளின் தாக்கத்தை மதிப்பிட உதவ புதிய கட்டமைப்பு

சமூகப் பணிகளின் தாக்கத்தை மதிப்பிட உதவ புதிய கட்டமைப்பு

2 mins read
88010725-4718-4b04-a141-4c06e610ffde
‘டெமி’ இயந்திர மனிதனால் கிட்டும் பயன்கள் குறித்து அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லிக்கு விளக்குகிறார் ‘அவ்வா’ பகல்நேர நடவடிக்கை நிலைய மேற்பார்வையாளர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெருநிறுவனங்கள் நன்கொடை வழங்கும்போதும் தொண்டூழியம் புரியும்போதும் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சேர்ப்பு நடைமுறைகளைப் பின்பற்றும்போதும் அவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை மதிப்பிடவும் கண்காணிக்கவும் புதிய நீடித்து நிலைக்கத்தக்க கொடைக் கட்டமைப்பு வழிகாட்டும்.

இப்புதிய வழிகாட்டி நெறிமுறைக் கட்டமைப்பானது 2024 முதலாம் காலாண்டில் அறிமுகம் காணும்.

அத்துடன், சமூக சேவை அமைப்புகளுடனான பங்காளித்துவத்தை வலுப்படுத்த பெருநிறுவனங்களுக்கு உதவும் உத்திகள் அடங்கிய ஒரு நூலும் வெளியிடப்படும்.

தேசிய சமூக சேவை மன்றம் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்திருந்த வருடாந்திர சமூக சேவை உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்டபோது சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி இதனை அறிவித்தார்.

தொழில்நிறுவனங்கள் தங்களுடைய சுற்றுச்சூழல், சமுதாய, ஆட்சிமுறை நடவடிக்கைகளின் ‘சமூக’ அம்சங்களைச் சிறந்த முறையில் வடிவமைக்கவும் கண்காணிக்கவும் உதவுவதற்கு இந்தக் கட்டமைப்பு இலக்கு கொண்டுள்ளது.

சமூக சேவை அமைப்புகளுக்கும் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட தேசிய சமூக சேவை மன்றம் திட்டமிடுகிறது.

“பெருநிறுவனங்களும் சமூக சேவை அமைப்புகளும் ஒன்றுக்கொன்று தங்களது வலிமைகளைப் பயன்படுத்தி, தங்களது சேவைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை அதிகரிக்க ஏதுவாக பலதுறைப் பங்காளித்துவத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டியது அவசியம்,” என்று அமைச்சர் மசகோஸ் வலியுறுத்தினார்.

‘தொடர்புகளை வலுப்படுத்துதல், செயல்விளைவிற்காகக் கைகோத்தல்’ எனும் கருப்பொருளுடன் கூடிய இவ்வாண்டு மாநாடு ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.

இந்த இருநாள் மாநாட்டில் சமூக சேவை அமைப்புகள், பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்க அமைப்புகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 700 பேராளர்கள் பங்கேற்றனர்.

சமூக சேவை, செயல்திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இவ்வாண்டின் பிற்பகுதியில் தனது முதலாவது ‘சமூக சேவை வட்டத் திருவிழா’வையும் தேசிய சமூக சேவை மன்றம் நடத்தவுள்ளது.

குறிப்புச் சொற்கள்