குற்றவாளிகளின் மனநலனையும் அவர்களின் சிறப்புத் தேவைகளையும் சிங்கப்பூர் அரசாங்கம் எப்படி ஆதரிக்கலாம் என்பதை அலசி ஆராய ஒருங்கிணைந்த நீதித்துறைப் பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவை அரசாங்கம் எவ்வாறு வழங்கலாம் என்பதையும் பணிக்குழு ஆராயும்.
குற்றவாளிகளும் குற்றங்களால் பாதிக்கப்பட்டோரும் மனநோய், மனச்சிதைவு, கற்றல் குறைபாடு போன்றவற்றால் அவதியுறலாம்.
புதிய ஒருங்கிணைந்த நீதித் துறைப் பணிக்குழு ஒட்டுமொத்த குற்றவியல் நீதி நடைமுறைகளை மறுஆய்வு செய்யும் என்று சட்ட அமைச்சு வியாழக்கிழமை (ஜனவரி 8) தெரிவித்தது.
குற்றத்திற்கு முந்தைய நிலை, குற்றவியல் விசாரணைகள், நீதிமன்ற நடைமுறைகள், தண்டனைகள், தண்டனைக்குப் பின் வழங்கப்படும் ஆதரவு ஆகிய பல அம்சங்களைப் பணிக்குழு மறுஆய்வு செய்யவிருக்கிறது.
தற்போதுள்ள நடைமுறைகளையும் மறுஆய்வு செய்து மேம்படுத்துவதற்கான அம்சங்களைக் கண்டறிந்து அதற்கேற்ற பரிந்துரைகளைப் பணிக்குழு அரசாங்கத்திடம் முன்வைக்கும்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமான ‘எக்சஸ் டு ஜஸ்டிஸ்’ (Access to Justice) கருத்தரங்கில் சட்ட அமைச்சர் எட்வின் டோங் பணிக்குழுவை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்தார்.
20 உறுப்பினர்கள் கொண்ட பணிக்குழுவுக்குச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு, சட்டத் துறைகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, பழுத்த அனுபவமுடைய வழக்கறிஞர் பெகி யீ ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
வலுவான உறுப்பினர்களைக் கொண்டு பணிக்குழு அமைக்கப்பட்டிருப்பதாகச் சொன்ன திரு சுவா, தற்போதைய நடைமுறைகளை ஆராய்ந்து இடைவெளிகளைக் கண்டறிவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
மனநலப் பிரச்சினைகளும் குறைபாடுகளும் உள்ள தனிநபர்கள் தங்களுக்காக வாதாடிக்கொள்ள முடியாதவர்கள் என்ற திருவாட்டி யீ, அர்ப்பணிப்புள்ள ஆதரவு மூலம் நீதித் துறையில் உள்ள வெவ்வேறு கட்டங்களைக் கடந்துசெல்ல முடியும் என்று குறிப்பிட்டார்.
“குற்றவாளிகளோ, குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களோ, யாராக இருந்தாலும் அத்தகையோருக்கு உகந்த தீர்வுகளைக் கண்டறிய பணிக்குழு உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படவிருக்கிறோம்,” என்று திருவாட்டி யீ கூறினார்.
ஒருங்கிணைந்த நீதித் துறை பணிக்குழுவில் வழக்கறிஞர்கள், கொள்கை ஆய்வாளர்கள், சட்ட அமலாக்க அதிகாரிகள், சமூகச் சேவை நிபுணர்கள், சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள், பராமரிப்பாளர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

