கட்டுமானம், கட்டடக்கலை, உள்கட்டமைப்பு நிர்வாகத்துறைகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இத்துறைகளில் உள்ள பணிகளில் சேர கூடுதல் திறனாளர்கள், குறிப்பாக இளையர்களை ஈர்ப்பதே பணிக்குழுவின் இலக்கு.
இத்துறைகளில் உள்ள வேலைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்தும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ செப்டம்பர் மாதம் 4ஆம் தேதியன்று தெரிவித்தார்.
சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு மையத்தில் நடைபெறும் மூன்று நாள் வர்த்தக நிகழ்வின் திறப்பு விழாவில் அவர் கலந்துகொண்டு பேசினார்.
இந்த வர்த்தக நிகழ்வு செப்டம்பர் 4ஆம் தேதியிலிருந்து 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
“கட்டுமானம், கட்டடக்கலை, உள்கட்டமைப்பு துறைகளை மேம்படுத்தவும் மற்றவர்களைக் கவரக்கூடியதாகவும் மாற்றியமைக்க இத்துறைகளைச் சேர்ந்த அனைத்துப் பங்குதாரர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,” என்று அமைச்சர் லீ கூறினார்.
புதிய பணிக்குழுவுக்கு சுர்பானா ஜூரோங்கின் தலைவர் சாலி மாவும் தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜாவும் தலைமை தாங்குகின்றனர்.
எதிர்காலத்துக்கு ஏற்புடையதாக ஊழியரணியையும் வேலையிடங்களையும் பணிக்குழு உருமாற்றத் திட்டமிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
நீடித்த நிலைத்தன்மை அணுகுமுறைகளைப் பணிக்குழு ஊக்குவிக்கும் என்று தெரிவித்த அமைச்சர் லீ, அடுத்து வரும் மாதங்களில் இதுதொடர்பான பரிந்துரைகளை அது முன்வைக்கும் எனக் கூறினார்.
இத்துறைகளைச் சேர்ந்த இளம் நிபுணர்களுடன் வர்த்தகச் சங்கங்கள், உயர்க்கல்வி நிலையங்கள் முதலியவை பணிக்குழுவில் அங்கம் வகிக்கின்றன.
சாங்கி விமான நிலைய முனையம் 5 போன்ற நீண்டகால கட்டுமானத் திட்டங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய ஆற்றல்மிக்க நிபுணர்கள், நிறுவனங்களை சிங்கப்பூர் கொண்டிருப்பதை உறுதி செய்ய இப்பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக கட்டடம், கட்டுமான ஆணையம் கூறியது.

