திருமணம், பிள்ளைப்பேற்றை ஊக்குவிக்க புதிய பணிக்குழு

திருமணம், பிள்ளைப்பேற்றை ஊக்குவிக்க புதிய பணிக்குழு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

29 Apr 2026 - 7:47 pm

2 mins read

சிங்கப்பூரின் கருவள விகிதம் 0.87க்குச் சரிந்துள்ள நிலையில், சிங்கப்பூரர்கள் திருமணம் செய்துகொள்ளவும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவும் ஆதரவளிக்கும் வகையில் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒருங்கிணைக்க அமைச்சுகளுக்கு இடையிலான புதிய பணிக்குழு இலக்கு கொண்டுள்ளது.

திருமணம், பிள்ளைப்பேறு ஆகியவற்றில் சிங்கப்பூரர்களுக்கு உதவும் நோக்கத்துடன், நிதிச் செலவுகள், வேலை-வாழ்க்கை ஆதரவு, வீடமைப்பு, சுகாதாரம், பாலர் பள்ளி, கல்வி உள்ளிட்ட பல விவகாரங்களை இந்தக் குழு ஆராயும்.

பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தலைமையிலான இந்தத் திருமணம், பிள்ளைப்பேற்று பணிக்குழுவில், சுகாதாரம், கல்வி, மனிதவளம், தொடர்புடைய மற்ற அமைச்சுகளைச் சேர்ந்த மேலும் எட்டு அரசியல் அலுவலகப் பொறுப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இது 2027ஆம் ஆண்டின் முற்பகுதியில் தனது கண்டுபிடிப்புகளுடன் கூடிய முழுமையான அறிக்கையை வெளியிடும். ஆனால், அதற்கு முன்னதாகவே பரிந்துரைகளை வழங்கக் கூடும்.

மானியங்களை அதிகரிப்பது, குழந்தை போனஸ் வழங்குதொகை, குழந்தை மேம்பாட்டுக் கணக்கு ஆதரவு போன்ற கொள்கை நடவடிக்கைகளில் பேரளவில் கவனம் செலுத்திய முந்தைய அணுகுமுறைகளிலிருந்து ஒரு மாற்றமாக இந்தப் பணிக்குழு செயல்படும் என்று புதன்கிழமையன்று (ஏப்ரல் 29) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இந்திராணி தெரிவித்தார்.

அதற்குப் பதிலாக, முதலாளிகள், சமய அமைப்புகள், சமூகம் உட்பட பலதரப்பட்ட பங்குதாரர்களை ஒருங்கிணைத்து, இதனை ஒரு தேசிய அளவிலான கூட்டு முயற்சியாக மாற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் விவரித்தார்.

திருமணம், பிள்ளைப்பேறு தொடர்பான முடிவுகள் கண்களுக்குப் புலப்படாத காரணங்களால் வடிவமைக்கப்படுகின்றன என்றும் அவற்றைக் கொள்கைகளால் மட்டுமே தீர்க்க முடியாது என்றும் அமைச்சர் இந்திராணி குறிப்பிட்டார்.

இந்தப் பணிக்குழு தனது பணிகளை இரண்டு விரிவான வழிகளில் அணுகும் என்று அவர் கூறினார்.

குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவு மற்றும் ஏற்புடைய விலையிலான வீடுகள் கிடைப்பது போன்றவற்றில் குடும்பங்களுக்குச் சிறந்த ஆதரவை வழங்குவதற்காக, அரசாங்கத்தின் கொள்கைகளை மறுஆய்வு செய்வது உள்ளிட்ட அரசாங்கத்தின் பங்கில் பணிக்குழு முதலில் கவனம் செலுத்தும்.

இந்த தேசியப் பிரச்சினைக்குப் பங்களிக்க ஒட்டுமொத்த சமூகமும் என்ன செய்ய முடியும் என்பதையும் பணிக்குழு ஆராயும்.

குறிப்புச் சொற்கள்
திருமணம்பிள்ளைப்பேறுபணிக்குழு