‘த காலாங்’ வளாகத்தில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் அல்லது கலைநிகழ்ச்சிகளைக் காண வரும் வருகையாளர்கள் இனி தங்களது இருக்கைகளில் இருந்தபடியே புதிய கைப்பேசிச் செயலி மூலம் உணவு, பானங்களை எளிதாக வாங்க முடியும்.
அத்துடன், மற்ற இடங்களில் நடைபெறும் ஆட்டங்களின் நிகழ்நேரப் புள்ளிகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளவும் சக ரசிகர்களுடன் நேரடியாக உரையாடவும் இந்த மேம்பட்ட செயலி வழிவகுக்கிறது.
காலாங் குழுமமும் ‘டெலாய்ட்’ நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் முதன்மை நோக்கம், சிங்கப்பூர் விளையாட்டு நடுவமாக முன்பு அழைக்கப்பட்ட ‘த காலாங்’கை, சிங்கப்பூரர்கள் மற்றும் சுற்றுப்பயணிகளின் அன்றாட வாழ்வின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாக மாற்றுவதாகும்.
ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இச்செயலி, நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச்சீட்டுகளை வாங்குதல், விளையாட்டு மைதானங்களை முன்பதிவு செய்தல், உணவுக்கூடங்களை முன்பதிவு செய்தல் மற்றும் ‘காலாங் காக்கி’ விசுவாசத் திட்டத்தின் சிறப்புச் சலுகைகளைப் பெறுதல் போன்ற பல்வேறு அம்சங்களை ஒரே தளத்தில் ஒருங்கிணைத்து வழங்குகிறது.
மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் பயனர்களின் சிறப்பு விருப்பங்களுக்கு ஏற்ப சிறந்த பரிந்துரைகளும் வழங்கப்படும். கூடுதல் சிறப்பம்சமாக, ஸ்டேடியம் எம்ஆர்டி அருகில் ‘டெலாய்ட் ஸ்பியர்’ என்ற நான்கு மீட்டர் அகலமுள்ள சிங்கப்பூரின் மிகப் பெரிய வெளிப்புற எல்இடி கோளம் அமைக்கப்பட்டுள்ளது.
இது சமூக அறிவிப்புகள், ரசிகர்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் விளையாட்டுத் தகவல்களை நேரலையாக ஒளிபரப்பும். ‘த காலாங்’ வளாகம் தேசிய விளையாட்டரங்கம், சிங்கப்பூர் உள்ளரங்கு, ஓசிபிசி நீச்சல் மையம் உள்ளிட்ட பல முக்கிய வசதிகளை உள்ளடக்கியது.
2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அரசாங்கம் இந்த மையத்துக்குப் பொறுப்பேற்றதிலிருந்து 4,000க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. ஏறத்தாழ 10 மில்லியன் வருகையாளர்கள் அவ்விடத்துக்குச் சென்றுள்ளனர். வரும் மாதங்களில், தேசிய விளையாட்டரங்கில் சிங்கப்பூர் பொது விருது டென்னிஸ் போட்டி, புகழ்பெற்ற பாடகர் ‘த வீக்கெண்ட்’டின் கலைநிகழ்ச்சி ஆகியவை அரங்கேறவுள்ளன.

