வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் வீடுகளின் கட்டுமானங்களில் இனி புதிய இயந்திரங்களும் தொழில்நுட்ப அம்சங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.
கட்டுமான வேகத்தையும் தானியக்கமயமாதலையும் அதிகரிக்கும் நோக்குடன் அந்த அம்சங்கள் அறிமுகம் காண்பதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) ரிசார்ட்ஸ் வேர்ல்டு செந்தோசாவில் நடந்த வீவக விருதளிப்பு விருந்தில் தெரிவித்தார்.
கட்டுமான ஊழியர்கள் வெவ்வேறு மாடிகளுக்குச் செல்லப் பயன்படுத்தும் மின்தூக்கிகளில் இனி மின்தூக்கியை இயக்கும் ஒருவர் கட்டாயமாக இருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
அதற்கு மாறாகத் தானியங்கி முறையில் இயங்கும் மின்தூக்கிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவவுள்ளன. அவற்றின்வழி மூன்று மின்தூக்கிகளை ஊழியர் ஒருவரே மேற்பார்வையிட முடியும்.
திறன்பேசி வாயிலாக மின்தூக்கிகளையும் அவற்றில் பயணம் செய்யும் ஊழியர்களையும் மேற்பார்வையாளர்கள் காண முடியுமெனத் தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமன்றி, கண்காணிப்புக் கருவிகளில் பொருத்தப்பட்டிருக்கும் உணர்கருவிகள் மின்தூக்கிகளில் ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களைச் சரியாக அணியாமலிருந்தால், அதைக் கண்டறிந்து எச்சரிக்கைச் செய்தியை ஒலிபரப்பும்.
மின்தூக்கிகளின் கதவுகளில் பொருத்தப்பட்டிருக்கும் ‘ஆன்டி-பின்ச்’ உணர்கருவிகள் கதவுகளுக்கிடையே பொருள்களோ மனிதர்களோ இருந்தால் கதவை மூடவிடாமல் திறக்கச்செய்யும்.
வீடுகளின் தரைகளில் டைல்கள், வினைல் ஆகியவை பொருத்தப்படுவதற்கு முன்பு தரை சமமான அளவில் இருப்பதை உறுதிசெய்ய இனி புதிய ரோபோ இயந்திரம் பயன்படுத்தப்படும்.
சிமென்ட் கலவையை ஊழியர்கள் தரை முழுவதும் கைப்பட சமப்படுத்துவதைக் குறைக்க இந்த புதிய ‘ஸ்க்ரீடிங்’ ரோபோ உதவுகிறது.
இந்த இயந்திரத்தைப் பயன்படுத்த ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுமென்று வீவக தெரிவித்தது.
புதிய மின்தூக்கிகள் இதுவரை உட்லண்ட்ஸ், ஈசூன், ரோச்சோர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள கட்டுமானத் தளங்களிலும் ரோபோ இயந்திரம் உட்லண்ட்ஸ், புக்கிட் மேரா, கிம் மோ ஆகிய வட்டாரங்களிலுள்ள கட்டுமானத் தளங்களிலும் சோதிக்கப்பட்டுள்ளதாக வீவக தெரிவித்தது.
2027ஆம் ஆண்டில் புதிய மின்தூக்கிகள், தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளுக்கான 50 விழுக்காட்டுக் கட்டுமானத் தளங்களில் பயன்படுத்தப்படும் என்றும் ரோபோ இயந்திரங்கள் நான்கு கூடுதல் தளங்களில் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பாரந்தூக்கிச் செயல்பாடுகளையும் ஊழியர் சுமையையும் குறைக்கும் வண்ணம் ‘இன்லோடர்’ (Inloader for Precast Component Handling) என்ற கருவி ஹைடிராலிக் ஜாக் அமைப்பைப் பயன்படுத்தி கட்டுமானப் பொருள்களை இடமாற்ற உதவும்.
அதுபோன்ற புத்தாக்க முயற்சிகளைக் கட்டுமான நிறுவனங்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கப் புதிய குறைக்கப்பட்ட நிறைவு நேரத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
நேரடி அளவீட்டுக் கருவிகள் இல்லாமல், மண் அகழ்வுப் பணிகளைத் துல்லியமாக வழிநடத்த செயற்கைக்கோள் நிலைப்படுத்தல், மின்னிலக்க நிலப்பரப்பு மாதிரிகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் முப்பரிமாண இயந்திரக் கட்டுப்பாட்டு அகழ்வு இயந்திரம் (3D Machine Control (3DMC) Excavator) ஒன்றும் தெங்கா கட்டுமானத் தளங்களில் சோதிக்கப்பட்டு வருகிறது.
புது வீடுகளில் பொருத்தப்படும் பொருள்கள் யாவும் சமமானதாக அமைய புதிய மேம்படுத்தப்பட்ட முன்வார்ப்பு பாகங்கள் பட்டியல் (Enhanced Precast Components Catalogue) செப்டம்பர் 29ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு டிசம்பரிலிருந்து அனைத்து ஏலக்குத்தகை விண்ணப்பங்களிலும் அமல்படுத்தப்படும் என்று திரு சீ கூறினார்.
அதன்வழி திட்டப்பணி நேரங்கள் 20 விழுக்காடு வரை குறையக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இனி வரும் ஆண்டுகளில் இவ்வம்சங்கள் வீவக கட்டுமானத் தளங்கள் அனைத்திலும் இடம்பெறும் வாய்ப்புண்டு என்று தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறந்த வடிவமைப்பிற்கான விருதுகள் தெங்காவில் அமைந்துள்ள ‘கார்டன் வைன்ஸ்’, ‘கார்டன் வேல்’ திட்டங்களுக்கும் ‘தோ பாயோ ரிட்ஜ்’ திட்டத்திற்கும் வழங்கப்பட்டன.
சிறந்த கட்டுமானத்திற்கான விருது பாசிர் ரிசில் அமைந்துள்ள ‘கோஸ்டா குரோவ்’ திட்டத்திற்கு வழங்கப்பட்டது.
