தேசிய தின அணிவகுப்பின்போது பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் நுழைவாயில்களில் ‘எல்இடி’ விளக்குகள் பொருத்தி வழிகாட்டுதல் உட்படப் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவிருக்கின்றன.
மேலும், காவல்துறை அதிகாரிகள் கிட்டத்தட்ட 2,000 பேர் பணியில் ஈடுபட்டிருப்பர் என்று தெரிவிக்கப்பட்டது.
மரினா பே சேண்ட்ஸ் பகுதியில், அணிவகுப்பைக் காணச் செல்வதற்கான நுழைவாயில்களையும் வெளியேறும் வழிகளையும் அணுகுவதற்கு வழிகாட்டும் வகையில் ‘எல்இடி’ விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும்.
பார்வையாளர்களின் நடமாட்டத்தை ஒழுங்குபடுத்த இது உதவும் என்று கூறப்பட்டது. குறிப்பாக வாண வேடிக்கை அங்கத்தின்போது பார்வையாளர்கள் கலைந்து செல்லத் தொடங்கும்போது இது உதவியாக இருக்கும் என்று காவல்துறையின் உட்லண்ட்ஸ் பிரிவுக்கான தலைமைச் செயலாக்க அதிகாரி லீ ஹன் ஷெங் கூறினார்.
முன்னதாக, இந்த நடைமுறையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் ஜூலை 3ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அவர், “செல்லவேண்டிய திசையைக் காட்டும் அறிவிப்புக் குறிகளுடன் கூடிய ஒளியூட்டப்பட்ட பலூன்களும் பயன்படுத்தப்படும். கூட்ட நெரிசலில் வழியைக் கண்டுபிடிக்கவும் பொதுப் பாதுகாப்பை அதிகரிக்கவும் இது உதவும்,” என்று கூறினார்.
மேலும், காவல்துறை, கடலோரக் காவற்படை, போக்குவரத்துக் காவல்துறை, பொதுப் போக்குவரத்துப் பாதுகாப்புத் தளபத்தியம், கூர்க்கா படைப்பிரிவு, சிறப்பு நடவடிக்கை தளபத்தியம் போன்றவற்றைச் சேர்ந்த கிட்டத்தட்ட 2,000 அதிகாரிகள் பாடாங்கிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பணியில் ஈடுபட்டிருப்பர் என்று தெரிவிக்கப்பட்டது.
துணைக்காவல் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சிங்கப்பூர் ஆயுதப் படை, சுகாதார அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகள் அவர்களுக்கு ஆதரவு வழங்குவர்.
அணிவகுப்பு நடைபெறும் இடமான பாடாங்கிற்குச் செல்வதற்கான அனைத்து நுழைவாயில் பகுதிகளிலும் பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
பாடாங்கைச் சுற்றிலும் பாதுகாப்புத் தடுப்புகளும் வாகனப் போக்குவரத்தைத் தடை செய்யும் தடுப்புகளும் அமைக்கப்பட்டிருக்கும்.
கூட்ட நெரிசல் ஏற்படக்கூடும் என்று கருதப்படும் இடங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கும்.
ஆளில்லா வானூர்திகளை வைத்திருப்பதற்கோ பறக்கவிடவோ அனுமதி இல்லை.
புதிய தொழில்நுட்பங்கள்
கலை, அறிவியல் அரும்பொருளகப் பகுதியிலிருந்து பேஃபிரண்ட் லிங்க் பகுதிக்கு அருகே செல்வதற்கான கதவுகளின் மேற்பகுதியில் ‘எல்இடி’ விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும்.
பொதுமக்கள் மரினா பே சேண்ட்ஸ் பகுதிக்குச் செல்வதையும் அங்கிருந்து வெளியேறுவதையும் உணர்த்தும் விதமாக அந்த விளக்குகள் சிவப்பு அல்லது பச்சை நிறத்தில் ஒளிரும்.
அந்த வாயிற்பகுதிகளில் காவல்துறை அதிகாரிகளும் பணியில் ஈடுபட்டிருப்பர்.
ஜூலை 22ஆம் தேதி நடைபெற்ற தேசிய தின அணிவகுப்புக்கான முன்னோட்டக் காட்சியின்போது இந்த ‘எல்இடி’ விளக்குக் கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
பொதுமக்களுக்கு அருகிலுள்ள ரயில் நிலையங்களுக்கு வழிகாட்ட உதவும் வகையில் ஒளியூட்டப்பட்ட இரண்டு பலூன்கள் ராஃபிள்ஸ் சிட்டி சென்டருக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும்.
காவல்துறை, மேம்படுத்தப்பட்ட ‘மொபிகேம்’ கருவியைக் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தும் என்று கூறப்பட்டது. போர் நினைவிடம் போன்ற பகுதிகளில் கூட்ட நெரிசலைக் கண்காணிக்க இது உதவும்.
அத்துடன், ‘கிரௌட்@மரினாபே’ எனும் கூட்ட நிலவரத்தைத் தெரிந்துகொள்ள உதவும் இணைய வரைபடத்தைப் பொதுமக்கள் பயன்படுத்தலாம்.
தேசிய தினத்தன்று பிற்பகல் 1.30 மணி முதல் இரவு 10 மணி வரை இதன் மூலம் கூட்ட நிலவரத்தைத் தெரிந்துகொள்ள முடியும்.
மேலும், ‘எல்இடி’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அறிவிப்புப் பலகைகள், ஒளியூட்டப்பட்ட நடைபாதைகள் போன்றவையும் தேசிய தின அணிவகுப்பை முன்னிட்டுக் கூட்ட நெரிசலைச் சமாளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

